மணல் அள்ளிய லாரி-பொக்லைன் எந்திரத்தை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு


மணல் அள்ளிய லாரி-பொக்லைன் எந்திரத்தை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 26 Oct 2018 4:30 AM IST (Updated: 26 Oct 2018 1:18 AM IST)
t-max-icont-min-icon

விராலிமலை அருகே மணல் அள்ளிய லாரி மற்றும் பொக்லைன் எந்திரத்தை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விராலிமலை,

விராலிமலை அருகே உள்ள மீனவேலி ஊராட்சி பெரிச்சிப்பட்டியில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் பெரியகுளம் மற்றும் வெள்ளாறு உள்ளது. இந்த பெரியகுளம் மற்றும் வெள்ளாற்றில் சிலர் அனுமதியின்றி மணல் அள்ளி, அதனை வெளி மாவட்டங்களில் விற்பனை செய்து வருகின்றனர். வருவாய்த்துறையினர், மணல் கடத்தும் லாரிகளை பிடித்து வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை பெரிச்சிப்பட்டி பெரியகுளத்தில் மணல் அள்ளுவதை அறிந்த கிராம மக்கள் அந்த பகுதிக்கு வந்து மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட பொக்லைன் எந்திரம் மற்றும் டிப்பர் லாரியை சிறைபிடித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விராலிமலை தாசில்தார் லூர்துசாமி மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அந்த பகுதியில் இருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து தாசில்தார் லூர்துசாமி டிப்பர் லாரி மற்றும் பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்து, விராலிமலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் விராலிமலை அருகே உள்ள காரமேட்டுப்பட்டியில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில்கோட்டாட்சியர் ஜெயபாரதி காரமேட்டுப்பட்டியில் சோதனை மேற்கொண்டார். அப்போது அந்த பகுதியில் அனுமதின்றி மணல் அள்ளிய 2 லாரிகள் மற்றும் பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்து, விராலிமலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

Next Story