18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு: அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பினை அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.
புதுச்சேரி,
தமிழகத்தில் சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிப்பு செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது. இதை புதுச்சேரி அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள். உப்பளத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாநில செயலாளர் புருஷோத்தமன் தலைமையில் உழவர்கரை நகர செயலாளர் அன்பானந்தம் முன்னிலையில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள்.
நிகழ்ச்சியில் துணை செயலாளர்கள் கணேசன், நாகமணி, பன்னீர்செல்வி, பிற அணி செயலாளர்கள் ஞானவேல், அன்துவான்சூசை, தொகுதி செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, பொன்னுசாமி, நாராயணன், ஜானிபாய், கலியபெருமாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல் முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் தலைமையில் 100 அடி ரோட்டில் உள்ள ஜெயலலிதா சிலையருகே பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள். நிகழ்ச்சியில் கோகுலகிருஷ்ணன் எம்.பி., இணை செயலாளர்கள் திருநாவுக்கரசு, முன்னாள் எம்.பி. ராமதாஸ், துணை செயலாளர் பெரியசாமி, மகளிர் அணி செயலாளர் விஜயலட்சுமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் நிருபர்களிடம் கூறும்போது, ஐகோர்ட்டின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை நாங்கள் தலைவணங்கி வரவேற்கிறோம். நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம்–புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்றார்.
அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க தி.மு.க.வும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் இணைந்து செய்த சதிசெயலால் தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பின் மூலம் சரியான பாடம் அவர்களுக்கு புகட்டப்பட்டு உள்ளது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் கழகத்தையும், இரட்டை இலை சின்னத்தையும் முடக்கம் செய்ய தி.மு.க.வும், கழகத்தினர் ஒரு சிலரால் செய்த சூழ்ச்சி தமிழ்நாடு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரால் முறியடிக்கப்பட்டது.
ஜெயலலிதாவின் எண்ணப்படி மக்கள் நலனுக்காக தங்கு தடையின்றி ஆட்சி நடத்த முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்த தீர்ப்பு மீண்டும் உத்வேகத்தை அளித்துள்ளது. அ.தி.மு.க.வை அழிக்க நினைக்கும் யாராக இருந்தாலும் அவர்கள் மிக விரைவில் காணாமல் போவார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அன்பழகன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.