காரைக்காலில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரியை மூட விடமாட்டோம் - நாராயணசாமி பேட்டி


காரைக்காலில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரியை மூட விடமாட்டோம் - நாராயணசாமி பேட்டி
x
தினத்தந்தி 26 Oct 2018 5:00 AM IST (Updated: 26 Oct 2018 1:45 AM IST)
t-max-icont-min-icon

காரைக்காலில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரி கிளையை மூட விட மாட்டோம் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

காரைக்கால்,

காரைக்காலில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். அமைச்சர் கமலக்கண்ணன் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய காங்கிரஸ் கட்சி மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத் கலந்து கொண்டு பேசினார். முன்னாள் எம்.எல்.ஏ. மாரிமுத்து, மாவட்ட தலைவர் பாஸ்கரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

வருகிற நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவது குறித்து, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசிக்கப்பட்டது. தேர்தல் பணிகளில் மிகவும் கவனத்துடன் செயல்படவேண்டும். ஒவ்வொரு வீடாக சென்று மோடி அரசின் 5 ஆண்டு கால தவறுகளை விரிவாக எடுத்துகூறி, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக செயல்படுமாறு கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தப்பட்டனர்.

வருகிற தீபாவளி பண்டிகையையொட்டி காரைக்காலில் திறக்கப்படும் சிறப்பு அங்காடி குறித்து சிலர் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். விரைவில் அதற்கான அறிவிப்பு செய்யப்படும். மேலும், காரைக்காலில் ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை மூடப்படவுள்ளதாக ஒரு சிலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர். இதை நம்ப வேண்டாம். இது குறித்து மக்களுக்கு எடுத்துக்கூறி புரிய வைக்க அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், கமலக்கண்ணன் ஆகியோரை வலியுறுத்தி உள்ளேன். எந்த காரணத்தைக் கொண்டும் காரைக்காலில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரி கிளையை மூடவிடமாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story