மரத்வாடா மண்டலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தானேயில் புதிய அணை கட்டப்படும் - மத்திய மந்திரி நிதின் கட்கரி அறிவிப்பு


மரத்வாடா மண்டலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தானேயில் புதிய அணை கட்டப்படும் - மத்திய மந்திரி நிதின் கட்கரி அறிவிப்பு
x
தினத்தந்தி 26 Oct 2018 3:30 AM IST (Updated: 26 Oct 2018 1:46 AM IST)
t-max-icont-min-icon

மரத்வாடா மண்டலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை நிரந்தரமாக போக்க தானேயில் புதிய அணை கட்டப்படும் என மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மத்திய நீர்வளத்துறை மந்திரி நிதின் கட்கரி நாசிக் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அதில் அவர் பேசியதாவது:-

நாசிக்,


ஆண்டுதோறும் நாசிக், அகமத்நகர் மாவட்டங்கள் மற்றும் மரத்வாடா மண்டலத்தில் நீர்பற்றாக்குறை நிலவுகிறது. இதை போக்குவதற்காக தானே மாவட்டத்தில் புதிய அணை கட்டப்படும். இந்த அணையில் இருந்து தண்ணீர் நாசிக் மற்றும் அகமத்நகர் மாவட்டத்தின் வழியாக அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள ெஜயக்வாடி அணையை சென்றடையும்.

இதன்மூலம் மரத்வாடா மண்டலத்தில் நிலவும் குடிநீர் பற்றாக்குறை நிரந்தரமாக சரிசெய்யப்படும்.

மேலும் நீர் வீணாக கடலில் சென்று கலப்பது தடுக்கப்படும்.

இந்த புதிய அணை ரூ.30 ஆயிரம் கோடி செலவில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொகையில் 90 சதவீதத்தை மத்திய அரசும், 10 சதவீதத்தை மாநில அரசும் வழங்கும்.

இந்த அணை குறித்தும் நீர் பகிர்மான ஒப்பந்தம் குறித்தும் மராட்டிய மற்றும் குஜராத் அரசுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தை 15 நாட்களுக்குள் நடைபெற உள்ளது.

இந்த பேச்சுவார்த்தையின்போது நாரங்-பர்-தாபி மற்றும் தாமன்கங்கா- பின்ஜால் நீர் திட்டங்கள் குறித்து பேசப்படும்.

நீர்பங்கீடு குறித்த பிரச்சினை மராட்டியத்தில் மட்டுமல்ல, நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ளது. இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் கங்கை, யமுனை நதிகளை இணைப்பதற்கான ஐந்து திட்டங்களை நடைமுறைப்படுத்த உள்ளோம்.

இந்த திட்டத்தின் விளைவாக கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களின் நீர்பங்கீடு பிரச்சினை நிரந்தரமாக தீர்க்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story