திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்


திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 26 Oct 2018 4:30 AM IST (Updated: 26 Oct 2018 2:39 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

திருச்சி,

மாற்றி வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ரூ.9 ஆயிரம் அகவிலைப்படியுடன் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும், ரூ.5 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும், ஒரு நபருக்கான உணவு செலவீனத்தை ரூ.5 ஆக உயர்த்த வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் நேற்று மாவட்ட தலைநகரங்களில் காத்திருப்பு போராட்டத்தை நடத்தினர்.

அதன்படி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த காத்திருப்பு போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் எலிசபெத் ராணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாவட்ட நிர்வாகிகள் மல்லிகா, சேட் முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்க தலைவர் விவேகானந்தன், பொருளாளர் பழனியப்பன், மாநில தலைவர் லெட்சுமணன், துணைத்தலைவர் சுரேஷ் உள்ளிட்ட பலர் போராட்டத்தை வாழ்த்தி பேசினர்.

திருச்சி மாவட்டம் முழுவதும் 3,600 சத்துணவு ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் என ஒரு மையத்துக்கு 3 பேர் பணியாற்றி வரும் நிலையில், நேற்றைய காத்திருப்பு போராட்டம் காரணமாக ஒரு மையத்திற்கு 1 அல்லது 2 பேர் மட்டும் பணி பாதிப்பு இல்லாமல் போராட்டத்தில் பங்கேற்றனர்.

போராட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் கூறுகையில், “கடந்த 35 ஆண்டுகாலமாக சத்துணவு திட்டம் சிறப்பாக நடந்து வருகிறது. இதற்கு காரணம் ஊழியர்களின் அர்ப்பணிப்பு உணர்வுதான். நாளுக்கு நாள் ஏறும் விலைவாசி உயர்வானது, குறைந்த ஊதியத்தில் வாழ்க்கை நடத்தும் சத்துணவு ஊழியர்களுக்கு தடுமாற்றத்தை உருவாக்குகிறது. எத்தனையோ முறை போராடியபோதெல்லாம் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படுவதாக அரசு சொல்கிறது. முதல்-அமைச்சராக ஜெயலலிதா இருந்தபோது, 110 விதியின் கீழ் சத்துணவு ஊழியர்களின் சிறப்பு காலமுறை ஊதியத்தை வரும் ஊதியக்குழுவில் மாற்றி அமைப்பேன், என்றார். ஆனால், இதுவரை நடக்கவில்லை. பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் அரசு இதுவரை கண்டுகொள்ளவே இல்லை. எனவே, அரசு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

Next Story