தொழில் முதலீட்டு அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஊழியர்களிடம் 2-வது நாளாக விசாரணை
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலியாக சேலம் தொழில் முதலீட்டு அலுவலக ஊழியர்களிடம் நேற்று 2-வது நாளாக போலீசார் விசாரணை நடத்தினர்.
சேலம்,
சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு வணிக வளாகத்தில் தமிழக அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக சேலம் கிளை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் மாலை அலுவலகத்தில் உள்ள ஒரு கணினியில் வந்த இ.மெயில்களை கிளை மேலாளர் பேபி பார்வையிட்டபோது அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.
இது குறித்து அவர் பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் வந்து சோதனை நடத்தினர். இதில் வெடிகுண்டு எதுவும் சிக்காததால், அது வெறும் புரளி என்று தெரிந்தது. இதைத்தொடர்ந்து அலுவலக ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் அலுவலக ஊழியர்களிடம் நேற்று 2-வது நாளாக விசாரணை நடத்தினர். இது குறித்து போலீசார் கூறும் போது, தொழில் முதலீட்டு அலுவலகத்தில் தற்போது பணியாற்றி வருபவர்களில் யாராவது ஒருவர் அல்லது இங்கு பணியாற்றி ஏதோ காரணத்தால் வேறு அலுவலகத்துக்கு பணிமாறுதலாகி சென்ற யாராவது தான் வெடிகுண்டு மிரட்டலில் ஈடுபட்டு இருக்க வேண்டும், வெளிநபர்கள் மிரட்டல் விடுப்பதற்கு வாய்ப்பு இல்லை. எனவே தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்று கூறினர்.
Related Tags :
Next Story