சென்னிமலையில் கோவில் –வீடுகளில் கலெக்டர் ஆய்வு; பேரூராட்சி செயல் அதிகாரியை கண்டித்ததால் பரபரப்பு


சென்னிமலையில் கோவில் –வீடுகளில் கலெக்டர் ஆய்வு; பேரூராட்சி செயல் அதிகாரியை கண்டித்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 27 Oct 2018 4:15 AM IST (Updated: 26 Oct 2018 11:00 PM IST)
t-max-icont-min-icon

சென்னிமலையில் வீடு– கடைகளில் கலெக்டர் ஆய்வு செய்தார். மேலும், பேரூராட்சி செயல் அதிகாரியை கண்டித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னிமலை,

சென்னிமலை பேரூராட்சி பகுதியில் ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் நேற்று திடீரென ஆய்வு செய்தார். பின்னர் சென்னிமலை உப்பிலிபாளையம் ரோட்டில் உள்ள விநாயகர் கோவில் வளாகத்துக்குள் கலெக்டர் திடீரென நுழைந்தார். அங்கு பராமரிப்பின்றி புதர் மண்டி கிடந்ததை அவர் கண்டார்.

இதைத்தொடர்ந்து கோவில் வளாகத்துக்குள் சுகாதாரமற்ற முறையில் வைத்திருந்த குடிநீர் தொட்டியை ஆய்வு செய்து அந்த தண்ணீரை வெளியேற்றும்படி கோவில் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், அந்தப்பகுதியில் உள்ள ஒரு டீக்கடைக்கு சென்று சுகாதாரமற்ற முறையில் தண்ணீர் வைத்திருந்ததையும் கண்டித்தார்.

இதையடுத்து சென்னிமலை காமராஜர் நகரில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்று மொட்டை மாடியில் வைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டியை ஆய்வு செய்தார். பின்னர் தண்ணீரை பாதுகாப்பாக வைத்திருப்பது குறித்து வீட்டின் உரிமையாளருக்கு ஆலோசனை வழங்கினார். பின்னர் அதே பகுதியில் மற்றொரு வீட்டிற்குள் சென்றார். அங்கு வீட்டின் முன் பகுதியில் 2 சக்கர வாகனங்களை சர்வீஸ் செய்வதற்காக குடிநீர் தொட்டி இருந்தது. அந்த தொட்டிக்குள் சுகாதாரமற்ற முறையில் தண்ணீர் சேமித்து வைத்திருந்ததை கண்டார்.

அப்போது அந்த வீட்டின் உரிமையாளர் பாலுவுக்கு உடனடியாக இதுகுறித்து நோட்டீஸ் வழங்கும்படி பேரூராட்சி செயல் அதிகாரிக்கு உத்தரவிட்டார். பல இடங்களில் சுகாதாரமற்ற முறையில் தண்ணீர் தொட்டி மற்றும் அசுத்தமாக இருந்ததை கண்காணிக்க தவறிய சென்னிமலை பேரூராட்சி செயல் அதிகாரி கிருஷ்ணனை, கலெக்டர் கதிரவன் கண்டித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவர், டெங்கு பரவும் வகையில் குடிநீர் தொட்டிகளை யாராவது வைத்திருந்தால் குடிநீர் இணைப்பை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

அப்போது கலெக்டருடன் அரசு அதிகாரிகள் பலர் இருந்தனர்.


Next Story