பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் மயிலாடுதுறையில் நடந்தது
மயிலாடுதுறையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிற் சங்க கூட்டமைப்பு கூட்டுக்குழு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க அமைப்பு செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் வெங்கடேசன், சி.ஐ.டி.யு. தொழிற்சங்க கிளை தலைவர் ராமகிருஷ்ணன், அம்பேத்கர் தொழிலாளர் விடுதலை முன்னணயின் கிளை தலைவர் பூவராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தின்போது ஒப்பந்த நிலுவை தொகையை வழங்க வேண்டும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்பணம் கொடுக்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கான பண பலனை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில், ஓய்வு பெற்ற ஊழியர் முன்னேற்ற நல சங்க கிளை தலைவர் நாராயணன், கிளை செயலாளர் சிவாஜி மற்றும் தொழிற்சங்க கூட்டுக்குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். காத்திருப்பு போராட்டத்தால் அரசு போக்குவரத்து கழக பணி மனையில் தொழிற்சங்க கூட்டமைப்பு கூட்டுக்குழுவை சேர்ந்த தொழிலாளர்கள் நேற்று பணிக்கு செல்லவில்லை.
Related Tags :
Next Story