பெரம்பலூர், அரியலூரில் சத்துணவு ஊழியர்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம்


பெரம்பலூர், அரியலூரில் சத்துணவு ஊழியர்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 27 Oct 2018 4:15 AM IST (Updated: 27 Oct 2018 12:08 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர், அரியலூரில் சத்துணவு ஊழியர்கள் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடத்தினர். மேலும் சாலையோரத்தில் தக்காளி சாதம் சமைத்து சாப்பிட்டனர்.

பெரம்பலூர்,

சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியமும், சட்ட ரீதியான ஓய்வூதியமும் அரசு வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்கள், பணிக்கொடை அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சமும், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும். ஒரு மாணவருக்கு உணவூட்டும் செலவினம் ரூ.5 தர வேண்டும். காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நேற்று முன்தினம் மாநில தழுவிய மாவட்ட தலைநகரகங்களில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி, பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இரவு நேரங்களில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த அனுமதி கிடையாது என்று போராட்டத்தில் ஈடுபட்ட 83 பேரை மாலையில் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை இரவில் விடுவித்தனர்.

இந்நிலையில் நேற்று 2-வது நாளாக கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் அருகே சாலையோரத்தில் அமர்ந்து தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். இதற்கு சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் ஆனந்தராசு தலைமை தாங்கினார்.

மாநில துணை தலைவர் அமுதா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், செயலாளர் கொளஞ்சி, பொருளாளர் வெங்கடாஜலம் ஆகியோர் கோரிக்கைளை விளக்கி பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தயாளன், செயலாளர் குமரி அனந்தன், துணைத் தலைவர் சின்னத்துரை, தமிழ்நாடு சாலை பணியாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடர் காத்திருப்பு போராட்டம் என்பதால் மதியம் சாப்பிட வேண்டும் என்பதற்காக சமையல் செய்வதற்கு பாத்திரங்கள், கியாஸ் அடுப்பு, சமையல் கியாஸ் சிலிண்டர், அரிசி, காய்கறி, மளிகை பொருட்கள் ஆகியவை போராட்டக்களத்திற்கே சத்துணவு ஊழியர்கள் கொண்டு வந்திருந்தனர். அப்போது சமையல் செய்வதற்கு அனுமதி கிடையாது என்று பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தெரிவித்தனர். ஆனாலும் சத்துணவு ஊழியர்கள் சாலையோரத்தில் தக்காளி சாதம் சமைத்து சாப்பிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரியலூரில்...

இதேபோல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நேற்று 2- வது நாளாக காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு குடும்ப பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இதில் சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Next Story