ஊதிய உயர்வு வழங்கக்கோரி போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
ஊதிய உயர்வு வழங்கக்கோரி போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
விழுப்புரம்,
அரசு போக்குவரத்து கழகங்களுக்கு வரவுக்கும், செலவுக்குமான வித்தியாச தொகையை பட்ஜெட்டில் ஒதுக்கி அரசு நிதி வழங்க வேண்டும், நிலுவைத்தொகையுடன் ஒப்பந்த பலன்களை வழங்க வேண்டும், கடந்த கால ஊதிய ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக்கழக அனைத்து தொழிற்சங்கத்தினர் கடந்த 22-ந் தேதி அனைத்து பணிமனைகளிலும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இருந்தபோதிலும்
இவர்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை.
இதையடுத்து நேற்று தமிழகம் முழுவதும் அனைத்து பணிமனைகளிலும் அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக 2, 3-வது பணிமனைகளில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு தொ.மு.ச. மண்டல தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். இதில் சி.ஐ.டி.யு. மாநில துணை செயலாளர் மூர்த்தி, துணைத்தலைவர் ராமமூர்த்தி, தொ.மு.ச. பிரசார செயலாளர் ரவிச்சந்திரன், ஐ.என்.டி.யு.சி. மண்டல பொதுச்செயலாளர் முருகானந்தம், அறிவர் அம்பேத்கர் தொழிலாளர் விடுதலை முன்னணி தலைமை நிலைய செயலாளர் பொன்னுரங்கம், பணிமனை செயலாளர்கள் பிரபாதண்டபாணி, ஆறுமுகம், ராமலிங்கம், குணசேகரன், முரளி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இவர்கள் அனைவரும் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக 1-வது பணிமனை மற்றும் திண்டிவனம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, செஞ்சி, திருக்கோவிலூர், சங்கராபுரம், சின்னசேலம் ஆகிய இடங்களிலும் அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்டம் முழுவதும் அரசு போக்குவரத்துக்கழக அண்ணா தொழிற்சங்கத்தை தவிர மற்ற அனைத்து தொழிற்சங்கத்தினரும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு இருக்க அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மூலம் வழக்கம்போல் பஸ்கள் இயக்கப்பட்டுள்ளதாகவும், பஸ் போக்குவரத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story