திருவள்ளூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு சிறுவன், குழந்தை சாவு


திருவள்ளூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு சிறுவன், குழந்தை சாவு
x
தினத்தந்தி 27 Oct 2018 4:45 AM IST (Updated: 27 Oct 2018 12:49 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே மர்ம காய்ச்சலுக்கு ஒரு சிறுவனும், குழந்தையும் பரிதாபமாக இறந்தனர். உத்திரமேரூர் அருகே காய்ச்சலால் 30 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆங்காங்கே மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 174 பேர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், திருவள்ளூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு செய்து நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

இந்த நிலையில் திருவள்ளூரை அடுத்த சின்ன எடப்பாளையத்தை சேர்ந்த பூ வியாபாரி கணேஷ் என்பவரது 7 வயது மகன் நிதீஷ்வீரா மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தான். அவன் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தான்.

அதே போல திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் அதிகத்தூர் கிராமத்தை சேர்ந்த புகைப்பட கலைஞர் கார்த்திக் என்பவரது மகள் அஸ்விதா (3) என்ற குழந்தையும் மர்ம காய்ச்சலால் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்து போனது.

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த புலியூர், மருத்துவாம்பாடி, திருப்புலிவனம், அய்சூர், சின்னயாம்பூண்டி, மருதம் போன்ற பகுதிகளிலும் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த பகுதிகளை சேர்ந்த 30 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Next Story