நவீன சிகிச்சை மூலம் டிரைவருக்கு மூளையில் இருந்த புற்றுநோய் கட்டி அகற்றம்; தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை


நவீன சிகிச்சை மூலம் டிரைவருக்கு மூளையில் இருந்த புற்றுநோய் கட்டி அகற்றம்; தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை
x
தினத்தந்தி 27 Oct 2018 3:45 AM IST (Updated: 27 Oct 2018 1:36 AM IST)
t-max-icont-min-icon

நவீன சிகிச்சை மூலம் டிரைவருக்கு மூளையில் இருந்த புற்று நோய் கட்டியை அகற்றி தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.

மதுரை,

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் மணிசேகர்(வயது 44), டிரைவர். இவர் கடந்த 3 மாதங்களாக கடும் தலைவலி, திடீரென்று ஏற்படும் வலிப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டு வந்தார். எனவே அவர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சென்றார். அங்கு அவருக்கு எம்.ஆர்.ஐ.ஸ்கேன் செய்து பார்த்த போது மூளையின் இடது பக்கத்தில் மூட்டு செயல்பாடுகள் மற்றும் முகம் பேச்சு போன்றவற்றின் இயக்கம் போன்றவை நடைபெறும் இடத்திற்கு அருகே புற்று நோய் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இதனை ஆபரே‌ஷன் மூலம் அகற்றுவது மிகவும் சிரமம். ஏன் என்றால் கட்டியை அகற்றும் போது மூளையில் பாதிப்பு ஏற்பட்டால் அவரது உடலில் பக்கவாதமோ, பேச்சில் குறைபாடு போன்ற பல்வேறு பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. எனவே இந்த ஆபரே‌ஷனை செய்வது மிகவும் கஷ்டமான செயல் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் அவர் மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள ஹானா ஜோசப் நரம்பியல் ஆஸ்பத்திரிக்கு சென்றார். அவரை ஆஸ்பத்திரி தலைமை டாக்டரும், நிர்வாக இயக்குனருமான அருண்குமார் பரிசோதனை செய்தார். பின்னர் அவருக்கு நவீன கருவிகள் மூலம் மூளை பகுதியில் மட்டும் மரத்து போகும் ஊசியை போட்டு நுண்துளை ஆபரே‌ஷன் மூலம் மூளையின் உள்பகுதியில் இருக்கும் புற்றுநோய் கட்டியை டாக்டர்கள் அகற்றினார்கள்.

இது குறித்து டாக்டர் அருண்குமார் கூறியதாவது:–

மணிசேகருக்கு மூளையில் உள்ள புற்றுநோய் கட்டியை அகற்ற டாக்டர்கள் குழுவினருடன் ஆலோசனை நடத்தினோம். அப்போது மூளைக்கட்டியை அகற்றும் போது அவருடைய பேச்சு, முகம் மற்றும் மூட்டு செயல்பாடுகள் போன்றவற்றின் இயக்கம் பாதிக்காதவாறு ஆபரே‌ஷன் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து நோயாளிக்கு சாதாரண மயக்க மருந்து(மரத்து போகும்) ஊசியை போட்டு, அவருடன் பேச்சு கொடுத்து கொண்டே ஆபரே‌ஷன் செய்தோம். அப்போது எல்லோ 560 புளோரோசென்ஸ் மற்றும் சீஸ் பென்டிரோ போன்ற அதிநவீன நுண்ணோக்கி கருவி உதவியுடன் கட்டியை 2½ மணி நேரத்தில் டாக்டர்கள் அகற்றினார்கள். இந்த நவீன கருவி மூலம் கட்டியை அகற்றுவதால் அவருக்கு எவ்வித குறைபாடோ, பக்கவாதமோ வராமல் தடுக்கப்பட்டது. நோயாளி சுய நினைவுடன், அவருடன் பேசி கொண்டே நவீன கருவி மூலம் ஆபரே‌ஷன் செய்ததை பெரிய சாதனையாக கருதிகிறோம். ஏன் என்றால் இந்த வகையான ஆபரே‌ஷன் மேலை நாடுகள் மற்றும் வட இந்தியாவில் ஒரு சில ஆஸ்பத்திரியில் மட்டும் தான் செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பேட்டியின் போது நரம்பியல் அறுவை சிகிச்சை டாக்டர் செந்தில்குமார், மயக்கமருத்து டாக்டர்கள் கரோலின்சத்யா, அருண்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story