வீட்டில் மேற்கூரையை பிரித்து கொள்ளையடிக்க முயன்ற சிறுவன் கைது கழிவறையில் பதுங்கியவனை மடக்கி பிடித்தனர்
ஆரல்வாய்மொழியில் வீட்டின் மேற்கூரையை பிரித்து திருட முயன்ற சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
ஆரல்வாய்மொழி வி.டி.சி. அருகில் உள்ள குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அருணா (வயது 44). இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அப்பகுதியில் உள்ள ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலையில் வேலை பார்த்தார்.
நேற்று முன்தினம் காலை அருணா வழக்கம் போல் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார். காலை 10 மணியளவில் அருணாவின் வீட்டின் மேற்கூரையை பிரித்து மர்மநபர் ஒருவர் உள்ளே இறங்குவதை பக்கத்து விட்டு பெண் பார்த்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இதுபற்றி உடனே அருணாவுக்கு தகவல் தெரிவித்தார்.
அதன் பேரில் விரைந்து வந்த அருணா, அப்பகுதியில் உள்ள உறவினர்களுடன் வீட்டிற்குள் சென்று பார்த்தார். அங்கு கழிவறையில் சிறுவன் பதுங்கி இருந்தான். மேலும் 2 கிராம் நகையை கையில் வைத்திருந்தான். அதை தொடர்ந்து சிறுவனை மடக்கி பிடித்து ஆரல்வாய்மொழி போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், வேலூர் காட்பாடி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், லாரியில் கிளனராக வேலை பார்த்து வந்துள்ளான். சம்பவத்தன்று லாரி நாகர்கோவிலுக்கு பாரம் ஏற்றி வந்துள்ளது. முப்பந்தல் பகுதியில் வந்தபோது, டிரைவர் சிறுவனை வழியில் இறக்கி விட்டு சென்று விட்டார். இதனால், வழி தெரியாமல் சுற்றி திரிந்த சிறுவன் அருணாவின் வீட்டில் திருட முயன்ற போது பொதுமக்களிடம் சிக்கியது தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார் சிறுவனை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story