கரூரில் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்கத்தினர் 130 பேர் கைது


கரூரில் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்கத்தினர் 130 பேர் கைது
x
தினத்தந்தி 26 Oct 2018 9:45 PM GMT (Updated: 26 Oct 2018 8:29 PM GMT)

கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்தது. சத்துணவு ஊழியர் சங்கத்தினர் 130 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்,

கரூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்தது.
இதற்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் பாஸ்கரன், மாவட்ட செயலாளர் சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த போராட்டத்தின் போது, சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வு பெறும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு ஒட்டுமொத்த தொகை ரூ.5 லட்சமும், சமையல் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்கிட வேண்டும். காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் சத்துணவு ஊழியர்கள், சமையலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கலெக்டர் அலுவலக பிரதான நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தமிழக அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அனுமதியின்றி போராட்டம் நடத்துவதாக கூறி சத்துணவு ஊழியர்கள் 130 பேரை கைது செய்தனர். இதில் 119 பேர் பெண்கள், 11 பேர் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் தாந்தோன்றிமலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Next Story