ராகுல் காந்தி கைதை கண்டித்து திருச்சியில் மகிளா காங்கிரசார் திடீர் மறியல்


ராகுல் காந்தி கைதை கண்டித்து  திருச்சியில் மகிளா காங்கிரசார் திடீர் மறியல்
x
தினத்தந்தி 27 Oct 2018 3:45 AM IST (Updated: 27 Oct 2018 3:30 AM IST)
t-max-icont-min-icon

ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து மகிளா காங்கிரசார் திருச்சியில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

மலைக்கோட்டை,

சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா நீக்கப்பட்டதை கண்டித்து, டெல்லியில் சி.பி.ஐ. தலைமை அலுவலகம் முன் தொண்டர்களுடன் போராட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று கைது செய்யப்பட்டார். இதை கண்டித்தும், ரபேல் ஒப்பந்த ஊழல் தொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள் மாற்றப்பட்டதை கண்டித்தும் திருச்சி அருணாச்சலமன்றம் முன்பு மகிளா காங்கிரசார் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தலைமையிலான போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முன்னதாக திருச்சி, பெரம்பலூர், அரியலூர், நாகை ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த மகிளா காங்கிரஸ் நிர்வாகிகளுக்கான மண்டல ஆலோசனை கூட்டம் திருச்சி அருணாச்சலமன்றத்தில் நடந்தது. மகிளா காங்கிரஸ் மாநில துணைத்தலைவி ரேவதி ஷாக்கிலோ தலைமை தாங்கினார்.

அகில இந்திய மகிளா காங்கிரஸ் செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான பாத்திமாரோஸ்னா, மாநில தலைவி ஜான்சிராணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் காங்கிரஸ் கட்சி திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் கலை, மாநில பொதுச்செயலாளர் ஜெகதீஸ்வரி வரவேற்றார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாநில தலைவி ஜான்சிராணி பேசுகையில், “தமிழகத்தை 12 மண்டலமாக பிரித்து ஆலோசனை கூட்டத்தை நடத்தி வருகிறோம். விரைவில் உள்ளாட்சி தேர்தல் வர இருக்கிறது. இதில் 50 சதவீத பெண்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஆனால் மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் எத்தனைபேர் தேர்தலில் போட்டியிட தகுதியுடன் இருக்கிறீர்கள் என்று எண்ணிப்பார்க்க வேண்டும். முதலில் உங்கள் கிராமங்களில், வார்டுகளில் தெருமுனை கூட்டங்களை நடத்துங்கள். மக்கள் மத்தியில் அறிமுகமாகுங்கள். தற்போது பா.ஜனதா அரசு மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டு இருக்கிறது. காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க மகிளா காங்கிரசார் பாடுபட வேண்டும்” என்றார்.

Next Story