கலெக்டர் அலுவலகத்தில் முறையீட்டு கூட்டம்: அதிகாரிகள் பங்கேற்காததால் விவசாயிகள் வாக்குவாதம்


கலெக்டர் அலுவலகத்தில் முறையீட்டு கூட்டம்: அதிகாரிகள் பங்கேற்காததால் விவசாயிகள் வாக்குவாதம்
x
தினத்தந்தி 26 Oct 2018 10:00 PM GMT (Updated: 26 Oct 2018 10:12 PM GMT)

கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற முறையீட்டு கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்காததால் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கோவை,

கோவை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் முறையீட்டு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டம் தொடங்கியதும் விவசாயிகள் அனைவரும் எழுந்து நின்று, இந்த கூட்டத்தில் கலெக்டர், வருவாய் அலுவலர், மாவட்ட வன அதிகாரி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள வில்லை. குறிப்பாக வனத்துறை அதிகாரிகள் விவசாய முறையீட்டு கூட்டங்களில் கலந்து கொள்வது இல்லை. இதனால் வனத்துறை குறித்து விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைப்பது இல்லை. இந்த கூட் டத்தில் கலெக்டர் அல்லது வருவாய் அலுவலர் கலந்து கொள்ளவில்லை என்றால் வெளிநடப்பு செய்வோம் என்று கூறி அங்கிருந்த அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன் கலந்து கொண்டு விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:-

பழனிசாமி (தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்டக்குழு தலைவர்):- விதைகளை மானிய விலையில் வழங்க வேண்டும். மாநிலம் முழுவதும் விதைகள் உற்பத்தி மையம் அமைக்க வேண்டும். மின்வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும். நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு தடை சட்டத்தின்படி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். சுங்க கட்டண மையங்களை அரசு தடை செய்ய வேண்டும். நீலம்பூர் முதல் வாளையார் வரை கிடப்பில் போடப்பட்டுள்ள திட்ட சாலை பணியை விரிவாக்கம் செய்ய வேண்டும்.

கந்தசாமி (மதச்சார்பற்ற விவசாயிகள் சங்கம்):- பேரூர் குளத்தில் இருந்து வெளியேறும் உபரி நீர் செல்லும் வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டு, புதர் மண்டிக்கிடக்கிறது. வேளாண் பொறியியல் துறை சார்பில் மினி டிராக்டர் வாங்கிய விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படாமல் உள்ளது. அதை உடனே வழங்க வேண்டும். தனிநபர் பெயரில் உள்ள விவசாய நிலத்தை மட்டுமே கணக்கிட்டு சிறு விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்க வேண்டும்.

வழுக்குப்பாறை பாலு (விவசாயி):- கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு கடன் வழங்குவதை எளிதாக்க வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் உழவர் பாதுகாப்பு அட்டை வழங்க வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

கூட்டத்தில், காட்டு யானைகள் அட்டகாசத்தால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். தற்போது ஒரு வனத்துறை ஊழியரை காட்டு யானை கொன்றுள்ளது. எனவே அந்த யானையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து பதில் அளிக்க வேண்டிய மாவட்ட வன அதிகாரி இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று விவசாயிகள் கூறினர்.

அப்போது, அட்டகாசம் செய்யும் காட்டு யானையை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் வனத்துறையினர், விவசாயிகள், மாவட்ட நிர்வாகம் அடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

Next Story