கரும்புக்கான நிலுவைத்தொகை கேட்டு அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதம்: குறைகேட்பு கூட்டத்தில் பரபரப்பு


கரும்புக்கான நிலுவைத்தொகை கேட்டு அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதம்: குறைகேட்பு கூட்டத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 26 Oct 2018 10:00 PM GMT (Updated: 26 Oct 2018 10:52 PM GMT)

கரும்புக்கான நிலுவைத்தொகை கேட்டு அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர், 

கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அன்புசெல்வன் தலைமை தாங்கி பேசினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், முன்னோடி வங்கி மேலாளர் ஜோதிமணி, எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலை தனி அதிகாரி மணிமேகலை, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் கோமதி, வேளாண்மை இணை இயக்குனர் அண்ணாதுரை, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருபாகரன், உதவி இயக்குனர் பூவராகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தை தொடங்கி வைத்து கலெக்டர் அன்புசெல்வன் பேசுகையில், தமிழக அரசு விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இருப்பினும் விவசாயிகளின் பிரச்சினைகளை ஒரே நாளில் தீர்க்க முடியாது. சில பிரச்சினைகளை பேசி தீர்த்துக்கொள்ளலாம். இதற்காக என்னிடம் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

இதையடுத்து விவசாயிகள், நெல்லிக்குப்பம் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு டன்னுக்கு ரூ.50 ஊக்கத்தொகை வழங்குவதாக அறிவித்தது. இதை நம்பி விவசாயிகள் கரும்புகளை ஆலைக்கு அனுப்பினர். ஆனால் இது வரை அந்த தொகையை வழங்கவில்லை. மேலும் தமிழக அரசு அறிவித்த ரூ.200 பரிந்துரை விலையையும் கடந்த 4 ஆண்டுகளாக வழங்கவில்லை. ஆகவே நிலுவைத்தொகையை பெற்றுத்தர வேண்டும் என்றனர்.

இதற்கு பதில் அளித்த தனியார் சர்க்கரை ஆலை அதிகாரி, ரூ.50 ஊக்கத்தொகை தருவதாக கூறினோம். ஆனால் சர்க்கரைக்கு போதிய விலை இல்லாததாலும், நிதி நெருக்கடி காரணமாகவும் வழங்க முடியவில்லை. மாநில அரசு அறிவித்த பரிந்துரை விலையை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. அதனால் மத்திய அரசு அறிவித்த விலையை மட்டும் தான் நிர்வாகம் வழங்க சொல்லி இருக்கிறது என்றார்.

இதை கேட்ட விவசாயிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடு பட்டனர். நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை லாபத்துடன் தான் இயங்கி வருகிறது. இதை நிதி நெருக்கடி என்று எப்படி சொல்லலாம். ஆகவே நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று வாக்குவாதம் செய்தனர்.

உடன் கலெக்டர் அன்புசெல்வன், வேளாண்மை இணை இயக்குனர் ஆகியோர் குறுக்கிட்டு அனைவரையும் சமாதானப்படுத்தினர். அவர்களிடம் விவசாயிகள், இது 4 ஆண்டுகளாக உள்ள பிரச்சினை. இதற்கு தீர்வு காண வேண்டும் என்று வாக்குவாதம் செய்தனர். அப்போது விவசாயி மாதவன் தன்னுடைய கருத்தை சொல்ல முற்படும் போது, விவசாயிகள் சிலர் அவரை பேச விடாமல் தடுத்தனர்.

இதை பார்த்த கலெக்டர் மாதவனை பார்த்து, சம்பந்தப்பட்டவர்கள் பேசட்டும், நீங்கள் அமருங்கள் என்றார். உடன் அவர், சர்க்கரை நிலுவைத்தொகை பற்றி கடந்த கூட்டத்திலேயே நான் பேசினேன். இப்போது பேசக்கூடாதா? என்று கலெக்டரிடம் வாக்குவாதம் செய்து, நான் வெளிநடப்பு செய்கிறேன் என்று செல்ல முற்பட்டார்.

அவரை சக விவசாயிகள் சமாதானப்படுத்தி அமர வைத்தனர். அதன்பிறகு கலெக்டர், தனித்தனியாக நீங்களே பேசிக்கொண்டிருந்தால், பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்று கூறி, தனியார் சர்க்கரை ஆலை அதிகாரியிடம், நிலுவைத்தொகையை விவசாயிகளுக்கு எப்போது வழங்குவீர்கள் என்றார். அதற்கு அவர், நிலுவைத்தொகை வழங்குவது குறித்து விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். இதன்படி 53 விவசாயிகள் தவிர மற்றவர்கள் டன்னுக்கு ரூ.380 நிலுவைத்தொகையை பெற்றுக்கொண்டனர் என்றார்.

அதற்கு விவசாயிகள் மீண்டும் எழுந்து, யாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினீர்கள். விவசாயிகளை மிரட்டி கையெழுத்து வாங்கிக்கொண்டு பணத்தை கொடுத்து இருக்கிறீர்கள். தவறான தகவல்களை கூற வேண்டாம் என்று வாக்குவாதம் செய்தனர். அவர்களை சமாதானம் செய்த கலெக்டர், சர்க்கரை ஆலை அதிகாரியிடம் 15 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்புக்கான நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதற்கு பதில் அளிக்க முயன்ற சர்க்கரை ஆலை அதிகாரியிடம், கண்டிப்பாக 15 நாட்களுக்குள் அரசு அறிவித்த நிலுவைத்தொகையை 53 விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும். ரூ.50 ஊக்கத்தொகையையும் வழங்க வேண்டும் என்றார். இதையடுத்து விவசாயிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே நடந்த வாக்குவாதம் முடிவுக்கு வந்தது.

பின்னர் விவசாயிகள் தங்கள் கோரிக்கை குறித்து பேசினர். அப்போது வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை, நிலுவையில் உள்ள பயிர்காப்பீட்டு தொகை, பாசன வாய்க்கால்களை தூர்வாருதல், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஷட்டர்கள் பராமரிப்பு, உரம் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை பற்றி பேசினர். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு வாரத்துக்குள் நிவாரணம் கிடைக்க ஏறபாடு செய்வதாக கலெக்டர் தெரிவித்தார்.

இதில் விவசாயிகள் குஞ்சிதபாதம், மூர்த்தி, கலியபெருமாள், சுந்தரமூர்த்தி, ராமலிங்கம், ரவீந்திரன், காந்தி, வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story