மயில், காட்டுப்பன்றி அட்டகாசத்தால் கரும்பு, சோளப்பயிர் சேதம் - குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் புகார்


மயில், காட்டுப்பன்றி அட்டகாசத்தால் கரும்பு, சோளப்பயிர் சேதம் - குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் புகார்
x
தினத்தந்தி 26 Oct 2018 11:30 PM GMT (Updated: 26 Oct 2018 11:02 PM GMT)

நாகியம்பட்டி, வெள்ளையூர் பகுதிகளில் மயில், காட்டுப்பன்றி அட்டகாசத்தால் கரும்பு, சோளப்பயிர்கள் சேதம் அடைந்து உள்ளன என்று குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் புகார் கூறினர்.

சேலம்,

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் ரோகிணி தலைமையில் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கைகளை எடுத்து கூறினர். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

சேலம் முத்துநாயக்கன்பட்டியில் இருந்து இரும்பாலை செல்லும் சாலையோரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நாகியம்பட்டி, வெள்ளையூர் ஆகிய பகுதிகளில் பயிரிடப்பட்டிருக்கும் கரும்பு, சோளம் உள்ளிட்ட பயிர்களை காட்டுப்பன்றி, மயில் போன்றவை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு அதிகளவு இழப்பு ஏற்படுகிறது. இந்த இழப்பீட்டுக்கு வனத்துறை அதிகாரிகள் பொறுப்பேற்பதுடன் அட்டகாசம் செய்யும் காட்டுப்பன்றி, மயில் ஆகியவற்றை ஊருக்குள் வரவிடாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் அனைத்து பகுதிகளிலும் நிலவேம்பு கசாயம் வழங்க வேண்டும். ஆத்தூர் கோட்டத்தில் கணினி சிட்டா கேட்டு 3 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் குறைவான மனுக்களுக்கு மட்டுமே தீர்வு காணப்பட்டுள்ளது. இதனால் மீதமுள்ளவர்கள் விவசாய கடன் வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். டீசல், பெட்ரோல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விதைநெல் நாற்று நட்டு ஒரு மாதம் ஆகியும் இதுவரை போதிய மழை பெய்யவில்லை. தினமும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அதிகாரிகள் உதவியுடன் மரங்கள் வெட்டி கடத்தப்பட்டு வருகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தாண்டு மழை பொய்த்து விட்டதால் முன்கூட்டியே சேலம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எடப்பாடி அருகே உள்ள வெள்ளரிவெள்ளி ஏரிக்கு மட்டும் மேட்டூர் அணையின் உபரிநீர் கொண்டு வரப்படுகிறது. மற்றப்பகுதி மக்கள் குடிநீருக்காக போராடி வருகின்றனர். எனவே மேட்டூர் அணை உபரிநீரை மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம் உள்ளிட்டவைகளுக்கு நிரப்புவதற்கான திட்ட அறிக்கை தயார் செய்து தந்தால் நாங்களே முதல்-அமைச்சர் மற்றும் டெல்லியில் உள்ள அதிகாரிகளை சந்தித்து பேசுவோம். ஒவ்வொரு ஊராட்சியில் உள்ள மண்புழு தயாரிக்கும் குடோன் பயனற்று கிடக்கின்றது என்று அவர்கள் பேசினார்கள்.

கூடமலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி குமாரசாமி என்ற விவசாயி பட்டை போட்ட தொப்பியுடன் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டம் முடிவில் கலெக்டர் ரோகிணி பேசும் போது, விவசாயிகளின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் இந்த கூட்டத்தில் பன்றிக்காய்ச்சல் வராமல் தடுப்பது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விவசாயிகளிடம் கலெக்டர் ரோகிணி வழங்கினார்.



Next Story