திருச்சியில் பாதுகாப்பு பணிக்கு 750 போலீசார் கமிஷனர் அமல்ராஜ் தகவல்


திருச்சியில் பாதுகாப்பு பணிக்கு 750 போலீசார் கமிஷனர் அமல்ராஜ் தகவல்
x
தினத்தந்தி 27 Oct 2018 4:45 AM IST (Updated: 27 Oct 2018 5:08 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையையொட்டி, திருச்சியில் பாதுகாப்பு பணியில் 750 போலீசார் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் கூறினார்.

திருச்சி,

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற 6-ந் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி திருச்சி மாநகரத்துக்குட்பட்ட மெயின்கார்டுகேட் என்.எஸ்.பி.ரோடு, பெரியகடைவீதி, சிங்காரத்தோப்பு உள்ளிட்ட கடைவீதி பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் ஜவுளி வகைகள் எடுக்கவும், நகைகள் மற்றும் பொருட்களை வாங்கவும் திரண்டு வருவார்கள். இதனால் திருச்சி கடைவீதியில் மக்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் திருச்சி கடைவீதி பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. குறிப்பாக சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வருகிறார்கள். தமிழகத்தின் மையப்பகுதியில் திருச்சி மாவட்டம் அமைந்துள்ளதால் திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் ஜவுளி எடுப்பதற்காக திருச்சி கடைவீதி பகுதிக்கு குடும்பம், குடும்பமாக வந்து செல்கிறார்கள். தீபாவளிக்காக பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களிடம் கூட்டநெரிசலை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில், மாநகர காவல்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. திருடர்களை கண்காணிக்கும் வகையில் மெயின்கார்டுகேட், சிங்காரத்தோப்பு, சத்திரம் பஸ் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 127 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை கண்காணிக்கும் வகையிலும், பொதுமக்களுக்கு உதவிடும் வகையிலும், திருச்சி என்.எஸ்.பி.ரோட்டில் தெப்பக்குளம் அருகே காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த காவல் உதவி மையத்தை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் நேற்று திறந்து வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தீபாவளி பண்டிகையையொட்டி கடைவீதிக்கு வரும் பொதுமக்களிடம் திருட்டு, சங்கிலி பறிப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபடும் திருடர்களை கண்காணிக்கும் வகையில் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. தீபாவளி பாதுகாப்பு பணிக்காக கடைவீதியில் போலீஸ் துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் உள்பட 750 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். தேவைக்கேற்ப கூடுதல் போலீசார் நியமிக்கப்படும். பொதுமக்கள் தங்கள் உடைமைகளையும், நகைகளையும் பத்திரமாக பாதுகாத்து கொள்ள வேண்டும். குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் திருச்சி மாநகரில் தனியார் வணிக வளாகங்கள், குடியிருப்புகள், ஓட்டல்கள் என அனைத்து இடங்களிலும் கேமராக்களை நிறுவ வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அவ்வாறு அமைக்கப்படும் கேமராக்களை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைத்து கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி திருச்சி மாநகரம் முழுவதும் 3 ஆயிரம் கேமராக்கள் நிறுவுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 1,500 கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 750 கேமராக்கள் காவல்கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள கேமராக்களை இணைக்கும் பணியும் துரித வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதேபோல் கடைவீதி வரும் வாகனங்களை நிறுத்தவும் தனியாருக்கு சொந்தமான இடங்களில் பார்க்கிங் வசதிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுகள் விற்பனை செய்ய 98 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களால் 15 பேருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், சிலருக்கு பட்டாசு விற்க அனுமதி வழங்குவதற்கு பரிசீலனை செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் போலீஸ் துணை கமிஷனர் மயில்வாகனன், கோட்டை போலீஸ் உதவி கமிஷனர்கள் கோடிலிங்கம், விக்னேஷ்வரன், கபிலன், கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல், நுண்ணறிவுபிரிவு இன்ஸ்பெக்டர் வெங்கடாச்சலம் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தீபாவளி பண்டிகையையொட்டி கடைவீதிக்கு வரும் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு தெப்பக்குளம் தபால் அலுவலகம் பின்புறமுள்ள மாநகராட்சிக்கு சொந்தமான மைதானம், தெப்பக்குளம் பிஷப்ஈபர் பள்ளி மைதானம் மற்றும் கோட்டை ரெயில்வே ஸ்டேஷன்ரோடு பார்க்கிங் மைதானமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் மட்டும் நிறுத்துவதற்கு சிங்காரத்தோப்பு சூப்பர் பஜார் மற்றும் யானைக்குளம் மைதானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நான்கு சக்கர வாகனங்கள் மட்டும் நிறுத்துவதற்கு மேலப்புலிவார்டுரோடு, கெயிட்டி திரையரங்கம் உட்புறமுள்ள கார் நிறுத்துமிடம் மற்றும் பழைய குட்ஷெட்ரோடு இறுதியில் உள்ள ரெயில்வே மைதானம் ஆகிய இடங்கள் என மொத்தம் 6 இடங்களில் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Next Story