வத்தலக்குண்டுவில்: ஜவுளி வியாபாரம் செய்வதில் பிரச்சினை; இரு தரப்பினர் போராட்டம்
வத்தலக்குண்டுவில் தீபாவளி பண்டிகையையொட்டி மண்டபத்தில் ஜவுளி வியாபாரம் செய்வதில் ஏற்பட்ட பிரச்சினையில் இரு தரப்பினரும் போராட்டம் நடத்தினர்.
வத்தலக்குண்டு,
வத்தலக்குண்டு பத்ரகாளியம்மன் கோவில் அருகே தனியார் திரு மணமண்டபம் உள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி மண்டபத்தில் ஜவுளி வியாபாரம் செய்ய வாடகைக்கு விட்டு வந்தனர். இந்த ஆண்டும் வாடகைக்கு விட்டிருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வத்தலக்குண்டு வர்த்தக சங்க தலைவர் முருகேசன் தலைமையில் வர்த்தக சங்கத்தினர் மற்றும் ஜவுளிக்கடைக்காரர்கள் சுமார் 100 பேர் அந்த திருமண மண்டபம் முன்பு நேற்று போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த வத்தலக்குண்டு போலீசார் அங்கு வந்து, இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து மண்டபத்தில் ஜவுளி விற்பனையை தற்காலிகமாக நிறுத்துவதென்றும், இரு தரப்பினரும் பேசி முடிவெடுப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டது.
இந்நிலையில் திருமணமண்டப தரப்பினர் திரண்டு வந்து போலீஸ்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பிறகு இன்ஸ்பெக்டர் முருகனிடம் திருமண மண்டபத்தில் ஜவுளி விற்பனை செய்ய அனுமதிக்குமாறு மனு கொடுத்தனர். இதையடுத்து நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. அதில் இந்த ஆண்டு மட்டும் மண்டபத்தில் ஜவுளி வியாபாரம் நடத்திக்கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இதற்கு இரு தரப்பினரும் சம்மதம் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story