சத்தியமங்கலம் அருகே பனியன் கழிவு மூட்டைகளை கொட்டிய சரக்கு வேன் சிறைபிடிப்பு
சத்தியமங்கலம் அருகே பனியன் கழிவு மூட்டைகளை கொட்டிய சரக்கு வேனை விவசாயிகள் சிறைபிடித்தனர். மேலும் பனியன் கழிவு மூட்டைகளுடன் மனித உறுப்புகள் கிடப்பதாக விவசாயிகள் புகார் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் திப்புசுல்தான் ரோட்டில் பனியன் கம்பெனி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கம்பெனியில் இருந்து பனியன் கழிவுகள் மூட்டைகளில் கொண்டுவரப்பட்டு சத்தியமங்கலத்தில் உள்ள பெரியகுளம் ரோட்டில் கொட்டி தீ வைத்து எரிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் பெரியகுளம் ரோட்டுக்கு நேற்று சரக்கு வேன் ஒன்று வந்தது. அதில் வந்தவர்கள் வேனின் கதவை திறந்து அதில் உள்ள பனியன் கழிவு மூட்டைகளை எடுத்து ரோட்டோரம் கொட்ட தொடங்கினர்.
அப்போது அந்த வழியாக சென்ற விவசாயிகள் இதை பார்த்ததும் பனியன் கழிவுகளை கொட்ட எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இதுபற்றிய தகவல் அந்த பகுதியில் பரவியது. இதனால் ஏராளமான விவசாயிகள் ஒன்று திரண்டு பெரியகுளம் ரோட்டுக்கு வந்தனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் பனியன் கழிவு மூட்டைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதுடன், சரக்குவேனையும் சிறைபிடித்தனர்.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் தாசில்தார் கார்த்திக், நகராட்சி சுகாதார அதிகாரிகள், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விவசாயிகளிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகளிடம் விவசாயிகள் கூறுகையில், ‘திப்புசுல்தான் ரோட்டில் உள்ள ஒரு கம்பெனியில் இருந்து பனியன் கழிவு மூட்டைகள் இங்கு கொண்டுவரப்படுகிறது. அவ்வாறு கொண்டு வரப்படும் பனியன் கழிவுகள் ரோட்டோரம் கொட்டப்பட்டு தீ வைத்து எரிக்கப்படுகிறது.
இதன்காரணமாக அந்த ரோட்டில் புகை மூட்டம் எழும்புகிறது. இதனால் வாகன ஓட்டிகள் ரோட்டில் செல்ல முடியாமல் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சு திணறல் ஏற்படுகிறது. எனவே இங்கு பனியன் கழிவுகளை கண்டிப்பாக கொட்டி எரிக்க கூடாது. பனியன் கம்பெனி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் தற்போது கொண்டுவரப்பட்டு உள்ள பனியன் கழிவு மூட்டைகளில் மனித உறுப்புகள் கிடப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம்’ என புகாரையும் தெரிவித்தனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து பனியன் கம்பெனிக்கு சரக்கு வேன் கொண்டு செல்லப்பட்டது. அங்கு வைத்து ஒவ்வொரு மூட்டையில் உள்ள பனியன் கழிவுகள் கீழே கொட்டப்பட்டு சோதனையிடப்பட்டன. ஆனால் அவ்வாறு எந்த மனித உறுப்புகளும் இல்லை.
பின்னர் பனியன் கம்பெனி நிர்வாகிகளிடம் அதிகாரிகள் கூறுகையில், ‘பனியன் கழிவுகளை இனி ரோட்டோரம் கொட்டி எரிக்கக்கூடாது. இதை மீறி செயல்பட்டால் கம்பெனி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே ரோட்டோரம் கொட்டப்பட்டு எரிக்கப்பட்ட பனியன் கழிவு குப்பைகளை அங்கிருந்து அப்புறப்படுத்தி அந்த இடத்தை சுத்தம் செய்து கொடுக்க வேண்டும்’, என உத்தரவிட்டனர். இதில் சமாதானம் அடைந்த விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.