20 ரூபாய் நோட்டால் மலர்ந்த கள்ளக்காதல்; இளம்பெண்ணை கடத்திய வாலிபர் கைது
20 ரூபாய் நோட்டில் விளையாட்டாக எழுதிய செல்போன் எண் மூலம் மலர்ந்த கள்ளக்காதலால் இளம் பெண் கடத்தப்பட்டார். இதுதொடர்பாக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
அறச்சலூர்,
ஈரோடு மாவட்டம் அறச்சலூர் பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணுக்கு திருமணம் ஆகி கணவரும், 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்த பெண் தான் வைத்திருந்த 20 ரூபாய் நோட்டில் விளையாட்டுத்தனமாக தன்னுடைய செல்போன் எண்ணை எழுதினார். மேலும் இந்த நோட்டை அந்த பகுதியில் உள்ள கடையில் கொடுத்து பொருட்களை வாங்கினார்.
இந்த நோட்டு பல்வேறு நபர்களிடம் கைமாறி கோவை மாவட்டம் ஜல்லிப்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் (32) என்பவரின் கைக்கு சென்றது. அந்த 20 ரூபாய் நோட்டை வாங்கிய அவர் அதில் ஏதோ எழுத்து இருக்கிறதே என்று உற்றுப்பார்த்தார். அப்போது அதில் ஒரு செல்போன் எண் இருந்தது. உடனே அவரும் அந்த நோட்டில் எழுதப்பட்ட செல்போன் எண்ணை தொடர்பு கொண்டார்.
எதிர்முனையில் அறச்சலூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் பேசினார். அப்போதில் இருந்தே 2 பேரும் செல்போன் மூலம் ஆர்வமாக பேச தொடங்கினர். ஒருவர் பேச்சில் ஒருவர் மயங்கினர்.
இதைத்தொடர்ந்து 2 பேரும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நேரில் சந்தித்து பேசினார்கள் இருவருக்கும் கள்ளக்காதல் மலர்ந்தது. இதன் விளைவாக 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்தனர். 2 பேரும் பல்வேறு இடங்களுக்கும் சென்று வந்தனர். இதுபற்றிய தகவல் இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது. இதனால் அவர் தனது மனைவியை கண்டித்தார்.
இந்த நிலையில் அந்த இளம்பெண் கடந்த 19–ந் தேதி திடீரென மாயமாகிவிட்டார். உடனே அவருடைய கணவர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அந்த இளம்பெண்ணின் தாயார் அறச்சலூர் போலீசில் புகார் செய்தார். அந்தப்புகாரில், ‘தன்னுடைய மகளை கோவை மாவட்டம் ஜல்லிப்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் கடத்தி சென்றுவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என்று கூறி இருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில், ‘அந்த இளம்பெண் ஜல்லிப்பட்டியில் செந்தில்குமாருடன் இருப்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று இளம்பெண்ணை மீட்டு அறச்சலூர் அழைத்து வந்தனர். மேலும் இளம்பெண்ணை கடத்தியதாக செந்தில்குமாரை கைது செய்தனர்.