2-வது மனைவி பிரிந்து சென்றதால் விரக்தி: வங்கி மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை


2-வது மனைவி பிரிந்து சென்றதால் விரக்தி: வங்கி மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 28 Oct 2018 5:30 AM IST (Updated: 28 Oct 2018 1:10 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில், 2-வது மனைவி பிரிந்து சென்றதால் விரக்தி அடைந்த வங்கி மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சூரமங்கலம்,

சேலம் சூரமங்கலம் முல்லைநகர் ராஜாஜி தெருவை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது 46). இவர், ஆந்திராவில் உள்ள ஒரு வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். அதன் பிறகு அவர் வங்கியின் சேலம் கிளைக்கு இடமாற்றம் செய்து பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது. இவரது முதல் மனைவி உயிரிழந்த நிலையில், சென்னையில் ஒரு வங்கியில் பணிபுரியும் புவனா என்ற பெண்ணை சசிக்குமார் 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சசிக்குமாரின் முதல் மனைவிக்கு ஒரு மகள் உள்ளார்.

இதனிடையே, கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் புவனா, கணவரை விட்டு பிரிந்து சென்னையில் பெற்றோர் வீட்டில் இருந்து வேலைக்கு சென்று வருகிறார். அதேசமயம், சசிக்குமார் தனது வீட்டுக்கு வந்து தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு புவனாவை பலமுறை அழைத்தார். ஆனால் அவர் சேலத்திற்கு வரவில்லை. கடந்த 1½ ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும், இதனால் சசிக்குமார் விரக்தியடைந்து இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில், முல்லைநகரில் உள்ள தனது வீட்டில் சசிக்குமார் நேற்று காலை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சசிக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story