டெங்கு குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்; கலெக்டர் நடராஜன் அறிவுரை


டெங்கு குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்; கலெக்டர் நடராஜன் அறிவுரை
x
தினத்தந்தி 28 Oct 2018 4:00 AM IST (Updated: 28 Oct 2018 1:52 AM IST)
t-max-icont-min-icon

டி.கல்லுப்பட்டி பகுதியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் நடராஜன், டெங்கு குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

பேரையூர்,

டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட கலெக்டர் நடராஜன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது டி.கல்லுப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். பின்னர் அ.தொட்டியபட்டி கிராமத்திற்கு சென்று அங்குள்ள ஆரம்பப்பள்ளியில் மாணவ–மாணவிகளிடம் உரையாடினார். மாணவர்களிடம் சுகாதாரம் குறித்து கேள்வி கேட்டு டெங்கு விழிப்புணர்வு குறித்து தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில், தற்போது மாவட்டம் முழுவதும் காய்ச்சல் பரவி வருகிறது. எனவே மாணவர்கள் தான் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து அறிந்து கொள்வதுடன், அதனை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. துணி பைகளை பயன்படுத்த முன்வர வேண்டும் என்றார்.

பின்னர் அங்குள்ள மகளிர் சுகாதார வளாகத்திற்கு சென்று பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்களிடம் கூறியதுடன், அவர்களுக்கு துணிப்பைகளை வழங்கினார். தொடர்ந்து அங்கன்வாடி மையத்திற்கு சென்று குழைந்தைகளுக்கு ஆதார் அட்டை உள்ளதா என்று கேட்டார். மேலும் கிராமத்தில் சுகாதாரம் குறித்த உறுதிமொழி கலெக்டர் தலைமையில் கிராம மக்கள் எடுத்துக்கொண்டனர். இதுதவிர அங்கு நடைபெற்று வரும் நீர்வரத்து கால்வாய் பணிகளை பார்வையிட்டு கலெக்டர் ஆய்வு செய்தார்.

மேலும் டி.கல்லுப்பட்டி பேரூராட்சி பகுதியில் வடக்கு தெருவில் உள்ள குடிநீர் தொட்டி மீது ஏறி குடிநீர் சுகாதாரமாக உள்ளதா என்று ஆய்வு செய்தார். வீடுகளுக்கு முன்பு குடிநீர் தொட்டிகள் சுகாதாரமாக உள்ளதா என்றும், குடிநீர் தொட்டிகளில் கொசுக்கள் தங்காதவாறு பார்த்து கொள்ள வேண்டும் என்றும் மக்களுக்கு அறிவுரை கூறினார். பின்னர் அழகுநாச்சி ஊருணி வரத்து கால்வாய் தூர்வாரும் பணியை ஆய்வு செய்தார். ஆய்வின்போது தாசில்தார் இளமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரகாஷ், கலைச்செல்வன், செயல் அலுவலர் சின்னசாமி பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Next Story