அ.தி.மு.க.வில் சிலிப்பர்செல் யாரும் இல்லை - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
அ.தி.மு.க.வில் ‘சிலிப்பர்செல்’ என்று யாரும் இல்லை என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
திருமங்கலம்,
மத்திய அரசின் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் ஆரோக்கிய பாரத பயணம் என்ற விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடத்தப்படுகிறது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லி வரை இப்பேரணி நடக்கிறது. இந்தநிலையில் அந்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நேற்று காலை விருதுநகர் மாவட்டம் வழியாக மதுரை மாவட்டத்திற்குள் நுழைந்தது. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கலெக்டர் நடராஜன், சுகாதார துறை இயக்குனர் அர்ஜூன்குமார், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சண்முகசுந்தரம், தாசில்தார் ஆனந்தி ஆகியோர் வரவேற்றனர். பின்னர் மாவட்ட எல்லையில் இருந்த நான்கு வழிச்சாலை வழியாக கப்பலூர் டோல்கேட் வரை அமைச்சரும், கலெக்டரும் சைக்கிள் பேரணி சென்றனர். இந்த பேரணி பல்வேறு மாநிலங்கள் வழியாக ஜனவரி 26–ந்தேதி புதுடெல்லி சென்றடைகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள சமூக அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:–
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க இருக்கிறது. மழையை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளன. இழக்கக்கூடாததை டி.டி.வி.தினகரன் அணியினர் இழந்துவிட்டனர். ஜெயலலிதா பிரசாரம் செய்து 18 சட்டமன்ற உறுப்பினர்களை உருவாக்கினார். தினகரன் அணியினர் இரட்டை குதிரை சவாரி செய்கிறார்கள். ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றதால் தினகரன் ஆணவத்தில் பேசி வருகிறார். தினகரன் என்கிற தனிநபரை முன் வைத்து தான் அ.ம.மு.க. செயல்படுகிறது. அதை மக்கள் ஏற்கவில்லை. தினகரன் தனது சுயநலத்திற்காக 18 எம்.எல்.ஏ.க்களுக்கு துரோகம் செய்துவிட்டார். 18 பேரை ராஜாவாக்குகிறேன் என கூஜாவாக்கி உள்ளார். எடப்பாடி பழனிசாமியால் அ.தி.மு.க.வை காப்பற்ற முடியும் என்கிற நிலை உருவாகி உள்ளது. அ.தி.மு.க.வில் சிலிப்பர்செல் என யாரும் இல்லை. மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயம் வரும். அதில் ஏந்த குழப்பமும் இல்லை. 7 பேர் விடுதலை தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.