பல்வேறு இடங்களில் திருடப்பட்ட 14 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் 6 பேர் கைது


பல்வேறு இடங்களில் திருடப்பட்ட 14 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் 6 பேர் கைது
x
தினத்தந்தி 29 Oct 2018 4:30 AM IST (Updated: 29 Oct 2018 12:22 AM IST)
t-max-icont-min-icon

திருவெண்காடு பகுதிகளில் பல்வேறு இடங்களில் திருடப்பட்ட 14 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 6 பேரை கைது செய்தனர்.

நாகை மாவட்டம் திருவெண்காடு பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு சம்பவம் அதிக அளவில் நடைபெற்று வந்தது. இதை தொடர்ந்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில் சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சுவாமிநாதன் மேற்பார்வையில் திருவெண்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுதேவி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகவேல், மோகன், சிவகுருநாதன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் மங்கைமடம் கடைத்தெருவில் உள்ள ஒரு கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து பூம்புகார் கீழையூர் பகுதியை சேர்ந்த சந்திரன் மகன் சதிஷ்குமார்(வயது33), பெருந்தோட்டம் பகுதியை சேர்ந்த சேகர் மகன் சந்திரன்(24), மேலப்பாதி பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் கல்யாணராமன்(25), அதே பகுதியை சேர்ந்த சேகர் மகன் ஷோபன்ராஜ்(23), மேலப்பாதியை சேர்ந்த ராமதாஸ் மகன் விக்னேஷ்(23), திருவெண்காடு ஆரண்ய தெருவைசேர்ந்த தியாகராஜன் மகன் சரத்குமார்(24) ஆகிய 6 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் திருவெண்காடு பகுதிகளில் பல்வேறு இடங்களில் இவர்கள் 6 பேரும், பெருந்தோட்டம் பகுதியை சேர்ந்த சேகர் மகன் ரகு(22) என்பவரும் சேர்ந்து மோட்டார் சைக்கிள்களை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து 14 மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 6 பேரையும் போலீசார் கைது செய்து சீர்காழி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மேலும், மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கு தொடர்பாக தலைமறைவாக உள்ள ரகுவை வலைவீசி தேடி வருகின்றனர்.

மோட்டார் சைக்கிள்கள் திருடிய 6 பேரை கைது செய்த தனிப்படை போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் பாராட்டினார்.

Next Story