புதிய நலவாழ்வு மையம்; பொன்.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்
பரமக்குடி அருகே புதிய நலவாழ்வு மையத்தை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
பரமக்குடி,
பரமக்குடி அருகே உள்ள அரியனேந்தல் கிராமத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் புதிய நலவாழ்வு மையம் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் தலைமை தாங்கினார். பரமக்குடி சுகாதார துறை துணை இயக்குனர் டாக்டர் மீனாட்சி வரவேற்று பேசினார். விழாவில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு புதிய நலவாழ்வு மையத்தை குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:– இந்தியாவில் அனைத்து மக்களும் உடல் ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டும் என்பதற்காக ஆயூஷ்மான் பாரத் என்னும் ஒரு அற்புதமான திட்டத்தை பிரதமர் மோடி கொண்டு வந்திருக்கிறார். நாடு முழுக்க இருக்கக்கூடிய 10 கோடி குடும்பங்களை சேர்ந்த 50 கோடி மக்களுக்கான அற்புதமான சுகாதாரத்திற்கான திட்டத்தை செயல்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். ஒவ்வொரு ஆண்டும் ரூ.5 லட்சம் சிகிச்சைக்காக செயல்படுத்தப்படுகிறது.
நாட்டில் அனைவரும் வங்கி கணக்கு தொடங்குவதன் மூலம் நாம் பணத்தை சேமிக்கும் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். அதன்மூலம் அனைவருக்கும் வீடுகள் வழங்கும் திட்டத்தின் மூலம் 2022–ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீடுகள் வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். ராமநாதபுரம் மாவட்டத்தில் 1000 வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் 4.6 சதவீத மக்கள் தங்களது வாழ்க்கை தரத்தில் இருந்து வறுமைக்கோட்டிற்கு கீழ் தள்ளப்படுகின்றனர். இதன் அடிப்படையில் இந்தியாவில் 1.50 லட்சம் நலவாழ்வு மையங்களை தரம் உயர்த்த திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.