இன்சூரன்ஸ் தொகை பெறுவதற்காக சென்னையில் போலி எப்.ஐ.ஆர். தயாரிப்பு 2 பேர் கைது


இன்சூரன்ஸ் தொகை பெறுவதற்காக சென்னையில் போலி எப்.ஐ.ஆர். தயாரிப்பு 2 பேர் கைது
x
தினத்தந்தி 29 Oct 2018 3:45 AM IST (Updated: 29 Oct 2018 12:44 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இன்சூரன்ஸ் தொகை பெறுவதற்காக போலி எப்.ஐ.ஆர். (முதல் தகவல் அறிக்கை) தயாரித்ததாக 2 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

சென்னை,

சென்னை தாம்பரம் அருகே உள்ள சோமங்கலம் பகுதியில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மோகன் என்பவர் விபத்தில் உயிரிழந்தார். இவருக்கு இன்சூரன்ஸ் தொகை பெறுவதற்காக போலி எப்.ஐ.ஆர். (முதல் தகவல் அறிக்கை) தயாரிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

சோமங்கலம் காவல் நிலையத்தில் மோகன் விபத்தில் மரணமடைந்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதை அடிப்படையாக வைத்து போலி எப்.ஐ.ஆர். தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுபோல போலி எப்.ஐ.ஆர். தயாரித்து 4 கோர்ட்டுகள் வாயிலாக லட்சக்கணக்கில் இன்சூரன்ஸ் தொகை கேட்டு மனு தாக்கல் செய்துள்ளதாக புகாரில் கூறப்பட்டது.

இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினார்கள். சோழமண்டலம் இன்சூரன்ஸ் நிறுவனம் ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்கப்பட்டது.

சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்குமார் தலைமையில் மேற்கொண்ட விசாரணையில் சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் ஒருவரிடம் குமாஸ்தாவாக பணியாற்றும் ஸ்டீபன் என்பவரும், இன்னொரு பட்டதாரி வாலிபரான மோகன் என்பவரும் இணைந்து போலி எப்.ஐ.ஆர். நகல்களை தயாரித்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஸ்டீபன் சென்னை பம்மல் பகுதியை சேர்ந்தவர். மோகன் உள்ளகரத்தில் வசிப்பவர் ஆவார். இவர்கள் இருவரும் சேர்ந்து கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் போலி எப்.ஐ.ஆர். நகல்களை தயாரித்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதன்பேரில் மோகனையும், ஸ்டீபனையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.


Next Story