மனைவி, கள்ளக்காதலனுக்கு அரிவாள் வெட்டு தப்பி ஓடிய வாலிபருக்கு வலைவீச்சு


மனைவி, கள்ளக்காதலனுக்கு அரிவாள் வெட்டு தப்பி ஓடிய வாலிபருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 29 Oct 2018 4:15 AM IST (Updated: 29 Oct 2018 12:58 AM IST)
t-max-icont-min-icon

அனகாபுத்தூரில், கள்ளக்காதல் தகராறில் மனைவி மற்றும் கள்ளக்காதலனை அரிவாளால் வெட்டிய வாலிபர் மற்றும் அவரது நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த குன்றத்தூர், சோமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 30). இவருடைய மனைவி சத்யா(25). ரவிக்குமாரை பார்ப்பதற்காக அவருடைய நண்பரான அனகாபுத்தூரைச் சேர்ந்த ராஜேஷ்(27) என்பவர் அடிக்கடி சோமங்கலம் வந்து சென்றார்.

அப்போது ரவிக்குமாரின் மனைவி சத்யாவுக்கும், ராஜேஷூக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது.

இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினரால் அரசல் புரசலாக ரவிக்குமாருக்கு தெரிய வந்தது. அவர் தனது மனைவி மற்றும் நண்பர் இருவரையும் அழைத்து எச்சரித்தார். அத்துடன் கள்ளத்தொடர்பை கைவிட்டு விடுமாறும் கண்டித்தார்.

இதையடுத்து கள்ளக்காதல் ஜோடி, கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி அனகாபுத்தூர் ஜே.என். சாலையில் தனியாக வீடு எடுத்து, கணவன்-மனைவி போல் வசித்து வந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த ரவிக்குமார், நேற்று காலை தனது நண்பர்களான பாட்சா(23), சிவா(24) ஆகியோரை அழைத்துக்கொண்டு அனகாபுத்தூர் வந்தார். பின்னர் தனது மனைவி சத்யா தங்கி இருந்த வீட்டின் கதவை தட்டினார்.

அப்போது ராஜேஷ் கதவை திறந்தார். உடனே ரவிக்குமார் மற்றும் அவரது நண்பர்கள் ஒன்று சேர்ந்து ராஜேஷை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த சத்யாவுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

இருவரின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்ததால், ரவிக்குமார் மற்றும் அவரது நண்பர்கள் தாங்கள் தயாராக நிறுத்தி வைத்திருந்த ஆட்டோவில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த சங்கர் நகர் போலீசார், படுகாயமடைந்த ராஜேஷ் மற்றும் சத்யாவை மீட்டு சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ரவிக்குமார் மற்றும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.

Next Story