2016-17-ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீடு தொகையை வழங்க வேண்டும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தல்
2016-17-ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீடு தொகையை வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திருத்துறைப்பூண்டி,
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருத்துறைப்பூண்டி ஒன்றிய குழுவின் சார்பில் கட்சி வளர்ச்சி நிதியளிப்பு கூட்டம் திருத்துறைப்பூண்டியில் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய துணை செயலாளர் பாலு தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பாஸ்கர் முன்னிலை வகித்தார்.
இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சிவபுண்ணியம் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர் ஞானமோகன், முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன், விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் ஜோசப், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சந்திரராமன், ஒன்றிய பொருளாளர் மகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:-
தமிழ்நாடு அரசால் தேசிய வேளாண் காப்பீட்டு திட்டம், மாற்றியமைக்கப்பட்ட தேசிய வேளாண் காப்பீட்டு திட்டம், வானிலை அடிப்படையிலான பயிர்க்காப்பீட்டு திட்டம் போன்ற பல்வேறு பயிர்க்காப்பீட்டு திட்டங்கள் பிரதம மந்திரியின் புதிய பயிர்க்காப்பீட்டு திட்டம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் மூலம் கடந்த 2016-17-ம் ஆண்டில் விவசாயிகள் அனைவரும் தங்களது நெற்பயிர்க்காக காப்பீடு செய்திருந்தனர். ஆனால் இதுவரை பயிர்க்காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கவில்லை. இதனால் விவசாயிகள் மகசூல் இழப்பு ஏற்பட்டு வேதனையில் உள்ளனர்.
எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 2016-17-ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீட்டு இழப்பீடு தொகையை உடனே வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருத்துறைப்பூண்டி ஒன்றிய குழுவின் சார்பில் கட்சியின் நிதியாக ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தை முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன், மாவட்ட செயலாளர் சிவபுண்ணியத்திடம் வழங்கினார்.
Related Tags :
Next Story