தீபாவளி பண்டிகைக்கு பொருட்கள் வாங்க திருச்சி கடைவீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்
தீபாவளி பண்டிகைக்கு பொருட்கள் வாங்க திருச்சி கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
திருச்சி,
தீபாவளி பண்டிகை வருகிற 6-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது புதிய ஆடை, இனிப்பு, பலகார வகைகள், பட்டாசு ஆகியவை தான். தீபாவளியன்று அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து புதிய ஆடை அணிந்து வீட்டில் வழிபாடு நடத்துவது வழக்கம்.
தீபாவளிக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் பண்டிகைக்கான பொருட்கள் வாங்க திருச்சியில் மக்கள் கூட்டம் கடந்த சில நாட்களாக அலைமோதி வருகிறது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று விடுமுறை தினம் என்பதால் திருச்சி என்.எஸ்.பி. ரோடு, சின்னக்கடை வீதி, பெரிய கடைவீதிகளில் ஜவுளி உள்ளிட்ட பொருட்கள் வாங்க கூட்டம் அலைமோதியது.
திருச்சி மட்டுமில்லாமல் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் வந்து குவிந்தனர். இதனால் கடைவீதிகளில் எங்கு திரும்பினாலும் மக்கள் தலையாக காணப்பட்டது. கூட்டநெரிசலில் மர்மநபர்கள் தங்களுடைய கைவரிசையை காட்டி குற்றசம்பவங்களில் ஈடுபடுவதை தடுக்க போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. போலீஸ் உதவி மையமும் திறக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை நெருங்க, நெருங்க மேலும் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பண்டிகைக்காக கடைகளிலும் புதிய ஜவுளி ரகங்களையும், பல்வேறு வகையான பொருட்களையும் நிறுவனத்தினர் விற்பனைக்காக குவித்து வைத்துள்ளனர். அதேநேரத்தில் பெண்களுக்கான அலங்கார பொருட்கள் விற்பனையும் சிறிய கடைகளில் மும்முரமாக நடந்து வருகிறது.
திருச்சி மாநகரில் பட்டாசு கடைகள் ஆங்காங்கே திறக்கப்பட்டுள்ளன. புதிய ரக பட்டாசுகளும் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன. பட்டாசு வெடிக்க சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவால் இந்த ஆண்டு பட்டாசு விற்பனை அதிக அளவில் இருக்குமா? என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. வீடுகளில் முன்பு இனிப்பு வகைகள், பலகாரங்கள் செய்யும் பழக்கம் இருந்தது. தற்போது ஒரு சில வீடுகளில் மட்டும் தான் பலகாரங்கள் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். மற்றவர்கள் பெரும்பாலும் கடைகளில் ஆர்டர் கொடுத்து பெறுவது வாடிக்கையாகிவிட்டது. இதனால் இனிப்பு பலகார கடை நிர்வாகத்தினரும், மொத்தமாக ஆர்டர் செய்து கொடுக்கும் நபர்களும் பலகார விலைகளை அறிவித்து ஆர்டர் பிடிக்க தொடங்கி விட்டனர். ஒருசிலர் தற்போது முன்கூட்டியே பலகார ஆர்டர்களுக்கு முன்பதிவு செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story