குழந்தை திருமணம் செய்து பாலியல் துன்புறுத்தல்: வாலிபரின் பெற்றோர் உள்பட 4 பேர் ‘போக்சோ’ சட்டத்தில் கைது


குழந்தை திருமணம் செய்து பாலியல் துன்புறுத்தல்: வாலிபரின் பெற்றோர் உள்பட 4 பேர் ‘போக்சோ’ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 29 Oct 2018 4:45 AM IST (Updated: 29 Oct 2018 4:01 AM IST)
t-max-icont-min-icon

சிறுமி அளித்த புகாரின் பேரில், வாலிபரின் பெற்றோர் உள்பட 4 பேர் ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை,

17 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம் நடந்த நிலையில் அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தொடர்பாக வாலிபரின் பெற்றோர் உள்பட 4 பேர் ‘போக்சோ’ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை அருகே ராயண்டபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் குமரேசன் (வயது 24), பெங்களூருவில் வேலை செய்து வருகிறார். குமரேசனுக்கும், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இருவீட்டாரின் ஏற்பாட்டின் பேரில் கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 30-ந் தேதி திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் குமரேசன், சிறுமியிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி கடந்த மே மாதம் 23-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி தனது பாட்டி வீட்டில் தங்கி வசித்து வருகிறார்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமியை நேரில் சந்தித்து தனக்கு நடந்த குழந்தை திருமணம், பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் மனு அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்திக்கு பரிந்துரை செய்தார். அதைத் தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி விசாரணை நடத்தினார்.

விசாரணையில் சிறுமிக்கு இருவீட்டாரும் சேர்ந்து திருமணம் செய்து வைத்ததும், குமரேசன் பாலியல் ரீதியாக சிறுமியை துன்புறுத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் குமரேசன், அவரது பெற்றோர் ராஜேந்திரன்(57), அம்சா (51) மற்றும் சகோதரிகள் வானதி, சோபனா, உத்ரா மற்றும் சிறுமியின் பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் ராஜேந்திரன், அம்சா மற்றும் சிறுமியின் தாய், தந்தையை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள குமரேசன் உள்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story