திருப்பூரில் இருந்து கூடலூருக்கு: அரசு பஸ்சில் கடத்திய 18 கிலோ கஞ்சா பறிமுதல் - பெண் கைது; வியாபாரிக்கு வலைவீச்சு


திருப்பூரில் இருந்து கூடலூருக்கு: அரசு பஸ்சில் கடத்திய 18 கிலோ கஞ்சா பறிமுதல் - பெண் கைது; வியாபாரிக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 30 Oct 2018 3:00 AM IST (Updated: 29 Oct 2018 10:14 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் இருந்து கூடலூருக்கு அரசு பஸ்சில் கடத்தி வந்த 18 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கஞ்சா கடத்திய பெண்ணை கைது செய்தனர். வியாபாரியை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தேனி,

திருப்பூரில் இருந்து தேனி வழியாக கூடலூர் செல்லும் ஒரு அரசு பஸ்சில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக தேனி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையில் போலீசார் தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் நிலையத்துக்கு சென்று திருப்பூரில் இருந்து வந்த அரசு பஸ்சில் சோதனை செய்தனர்.

அப்போது அதில் 2 பைகள் கிடந்தன. அவற்றுக்குள் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவற்றில் மொத்தம் 18 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. விசாரணையில் பஸ்சில் வந்த தேவாரம் வடக்கு பேச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சின்னத்துரை மனைவி சாந்தி என்ற ஈஸ்வரி (வயது 47) என்பவர் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து சாந்தியை கைது செய்த போலீசார் கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் விசாரணையில், கீழக்கூடலூரை சேர்ந்த சோவு என்ற முத்தையா என்பவர் திருப்பூரில் உள்ள ஒரு வியாபாரியிடம் கஞ்சாவை வாங்கி, அதை சாந்தியிடம் கொடுத்து அனுப்பியதாகவும், கூடலூரில் வந்து வாங்கிக் கொள்வதாக கூறியதாகவும் தெரியவந்தது. அதன்பேரில் முத்தையாவை போலீசார் தேடி வருகின்றனர்.
1 More update

Next Story