மதுகுடிப்பதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்: இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த வாலிபர் கைது


மதுகுடிப்பதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்: இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 30 Oct 2018 4:30 AM IST (Updated: 29 Oct 2018 10:52 PM IST)
t-max-icont-min-icon

ஆட்டோவில் அமர்ந்து மதுகுடித்ததை கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த வாலிபர் இரு சக்கர வாகனங்களுக்கு தீ வைத்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

திரு.வி.க. நகர்,

சென்னை ஓட்டேரி தேவராஜ் தெருவில் வசித்து வருபவர் சகாயம்(வயது 37). சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இவர் தனது வீட்டின் அருகே ஆட்டோவை நிறுத்தி வைப்பது வழக்கம். அப்போது ஆட்டோவில் அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் இரவு நேரங்களில் அமர்ந்து புகைபிடிப்பது மற்றும் மது அருந்தி வந்துள்ளனர்.

இதைப்பார்த்த சகாயம் அந்த வாலிபர்களை அடிக்கடி கண்டித்து வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்களில் ஒருவரான அரிகரன்(19) என்பவர் நேற்று முன்தினம் நள்ளிரவு சகாயத்திற்கு சொந்தமான இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதில் தீ மளமளவென பரவி அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பக்கத்து வீடுகளில் வசிக்கும் ரமேஷ், காமேஷ், கோவிந்தராஜ் ஆகியோருக்கு சொந்தமான இரு சக்கர வாகனங்களிலும் தீப்பிடித்தது.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் தண்ணீரை ஊற்றி இரு சக்கர வாகனங்களில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனாலும் 5 இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன. ஒரு இருசக்கர வாகனத்தில் மட்டும் லேசாக தீப்பிடித்து.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஓட்டேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முகம்மது நாசர், சப்-இன்ஸ்பெக்டர் காதர்மீரா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, அரிகரன் இருசக்கர வாகனங்களுக்கு தீ வைக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

இதனை தொடர்ந்து அரிகரனை கைது செய்த போலீசார் அவரை ஜெயிலில் அடைத்தனர்.

Next Story