தரமான உணவு வழங்க கோரி விடுதி மாணவர்கள் தர்ணா; சங்கராபுரம் அருகே பரபரப்பு


தரமான உணவு வழங்க கோரி விடுதி மாணவர்கள் தர்ணா; சங்கராபுரம் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 30 Oct 2018 3:15 AM IST (Updated: 29 Oct 2018 11:27 PM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரம் அருகே தரமான உணவு வழங்க கோரி விடுதி மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்கராபுரம்,

சங்கராபுரம் அருகே தேவபாண்டலத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு தேவபாண்டலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். வெளியூர்களில் இருந்து வரும் மாணவர்கள் தங்கி படிப்பதற்கு வசதியாக ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் அதே பகுதியில் விடுதி ஒன்று கட்டப்பட்டது.

இந்த விடுதியில் 45 மாணவர்கள் தங்கியிருந்து பள்ளிக்கூடத்துக்கு சென்று வருகின்றனர். இந்த விடுதியில் மாணவர்களுக்கு தரமற்ற உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டு வந்ததாகவும், அங்குள்ள கழிவறையை பயன்படுத்த முடியாத அளவுக்கு சுகாதாரமற்ற முறையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலையும் மாணவர்களுக்கு தரமற்ற உணவு வழங்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் விடுதி நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி ஆதிதிராவிட நல தனி தாசில்தார் விஜயபிரபாகரன், வருவாய் ஆய்வாளர் தேவதாஸ், கிராம நிர்வாக அலுவலர் ஜெயலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மாணவர்கள் தங்களுக்கு தினசரி தரமான உணவு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும், கழிவறையை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என்று கூறினர். அதற்கு தனி தாசில்தார் விஜயபிரபாகரன், உங்கள் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

அதன் பேரில் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story