கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 113 பேர் கைது


கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 113 பேர் கைது
x
தினத்தந்தி 29 Oct 2018 9:45 PM GMT (Updated: 29 Oct 2018 6:55 PM GMT)

கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 113 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம், 

சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், 21 மாத ஊதிய உயர்வு நிலுவைத்தொகையை வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த 25-ந் தேதி முதல் சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

மாவட்ட தலைநகரங்களில் 3 நாட்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படாததால் நேற்று முதல் சத்துணவு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் கடந்த 3 நாட்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் போராட்டத்தின் 4-ம் நாளான நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தை சேர்ந்த அமைப்பாளர்கள், சமையலர்கள், உதவியாளர்கள் நேற்று பள்ளிகளில் சத்துணவு பணிக்கு செல்லாமல் பணியை புறக்கணித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

மேலும் கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட தலைநகரான விழுப்புரத்தில் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் வடிவேல் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் தேசிங்கு, துணைத்தலைவர்கள் மணிக்கண்ணன், ராஜேந்திரன், வீமன், இணை செயலாளர் ரஷிதா, பொருளாளர் விஜயா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த மறியல் காரணமாக விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனே விழுப்புரம் தாலுகா போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட 90 பெண்கள் உள்பட 113 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றிச்சென்று விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் கைதான அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

சத்துணவு ஊழியர்களின் இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக பள்ளிகளில் சத்துணவு சமைத்து மாணவர்களுக்கு வழங்குவதில் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதுகுறித்து சத்துணவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மாவட்டத்தில் 2,417 சத்துணவு மையங்கள் உள்ளன. இந்த மையங்களில் சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள், உதவியாளர்கள் என 5 ஆயிரத்து 515 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் மட்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் இந்த சங்கத்தை தவிர மாற்று சங்கத்தை சேர்ந்தவர்கள் பணியில் உள்ளனர். அவர்களையும் மற்றும் ஓய்வு பெற்றோர் சங்கத்தை சேர்ந்தவர்கள், பெற்றோர்- ஆசிரியர் கழகத்தை சேர்ந்தவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோரை பயன்படுத்தி அனைத்து பள்ளிகளிலும் சத்துணவு சமைத்து மாணவ- மாணவிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

Next Story