குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் கலெக்டரிடம் மனு


குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 30 Oct 2018 4:15 AM IST (Updated: 30 Oct 2018 12:47 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அன்பழகனிடம் மனு கொடுத்தனர்.

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் குடிநீர் வசதி, சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 306 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு தெரியப்படுத்துமாறு அரசு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

கரூர் அருகே ஏமூர் புதூர் காலனியை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த மனுவில், எங்கள் பகுதியில் ஆழ்குழாய் கிணற்றுடன் கூடிய குடிநீர் தொட்டி பழுதடைந்து காணப்படுகிறது. மேலும் காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மின்மோட்டார்கள் சேதமடைந்து விட்டதால் அதிலிருந்தும் குடிநீர் வினியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாக நாங்கள் பல்வேறு இடங்களுக்கு அலைந்து திரிந்து குடிநீர் பிடித்து வருகிறோம். குளிப்பதற்கு விவசாய கிணறுகளை தேடி செல்கிறோம். எனவே உரிய நடவடிக்கை மேற்கொண்டு எங்கள் பகுதியில் குடிநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இதேபோல் கிருஷ்ணராய புரம் தாலுகா ரெங்கநாதபுரம் வளையல்காரன் புதூரை சேர்ந்த பொதுமக்களும் காலிக்குடங்களுடன் வந்து மனு கொடுத்தனர். அதில், எங்கள் பகுதியிலுள்ள காவிரி ஆற்றில் அதிகளவு தண்ணீர் சென்றதால், குடிநீர் கொண்டு செல்லப்படும் குழாய்கள் அடித்து செல்லப்பட்டுவிட்டன. இதற்கு மாற்று ஏற்பாடு ஏதும் செய்யப்படாததால் எங்கள் பகுதிக்கு குடிநீர் வினியோகம்செய்வதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

அரவக்குறிச்சி தாலுகா வேலாயுதம்பாளையம், காளிபாளையம், சாலிபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர். அதில், எங்கள் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. எங்கள் ஊரை சுற்றிலும் உள்ள சில கல் குவாரிகள் அரசு விதிகளை மீறி 50 அடி முதல் 100 அடி ஆழம் வரை பூமியில் துளையிட்டு வெடி வைத்து பாறைகளை தகர்க்கின்றனர். இதனால் ஏற்படும் அதிர்வின் காரணமாக சில வீட்டின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. குழந்தைகள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் குவாரி வெடி சத்தத்தினால் அச்சமடைகின்றனர். மேலும் அந்த வெடிமருந்துகளால் நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு விதிகளை மீறி கல் குவாரிகளில் வெடிவைப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

கரூர் காமராஜபுரம் வடக்கு திருநகரை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் போடப்பட்ட சாலை நீண்ட நாட்கள் ஆவதால் குண்டும், குழியுமாக உருக்குலைந்து கிடக்கிறது. இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் நிலைதடுமாறி கீழே விழும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. எனவே இங்கு புதிதாக சாலை அமைத்து தர அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று கூறியிருந்தனர்.

ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம் மாவட்ட செயலாளர் முல்லையரசு உள்ளிட்ட நிர்வாகிகள் அளித்த மனுவில், கரூர் அருகே ராயனூர் காலனியில் உள்ள பொதுகழிப்பிடம் பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி இந்த கழிப்பிடத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். கிருஷ்ணராயபுரம் வட்டம் வீரியம்பாளையம், கண்ணமுத்தாம்பட்டியில் தெருவிளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் என்று கூறியிருந்தனர். சின்னதாராபுரம் அணைப்புதூர் மக்கள் 75 வருடமாக தாங்கள் குடியிருக்கும் இடத்திற்கு பட்டா கேட்டு மனு கொடுத்தனர்.

இந்த கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மன வளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளிகளில் பணியாற்றும் 2 சிறப்பாசிரியர்கள் மற்றும் 1 தசை பயிற்சியாளருக்கு தொகுப்பு ஊதியமாக தலா ரூ.3 லட்சத்து 60 ஆயிரத்திற்கான காசோலையினை மாவட்ட கலெக்டர் வழங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், மக்கள் குறை தீர்க்கும் தனித்துணை கலெக்டர் மீனாட்சி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அதிகாரி குமரேசன், மாவட்ட ஆதி திராவிடர் நல அதிகாரி லீலாவதி, மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி ஜான்சி மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story