புனேயில் பணத்தகராறில் தலையில் கல்லைப்போட்டு தச்சு தொழிலாளி கொலை நண்பர் கைது


புனேயில் பணத்தகராறில் தலையில் கல்லைப்போட்டு தச்சு தொழிலாளி கொலை நண்பர் கைது
x
தினத்தந்தி 30 Oct 2018 3:45 AM IST (Updated: 30 Oct 2018 1:09 AM IST)
t-max-icont-min-icon

புனேயில் பணத்தகராறில் தலையில் கல்லைப் போட்டு தச்சு தொழிலாளியை கொலை செய்த அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.

புனே,

புனே லோகாவ் பகுதியை சேர்ந்தவர் நரேஷ்குமார் (வயது35). இவரது நண்பர் துர்கேஷ் (29). இருவரும் தச்சு தொழிலாளிகள் ஆவர். இந்த நிலையில் துர்கேசுக்கு நரேஷ் குமார் ரூ.2 ஆயிரம் கொடுக்க வேண்டியது இருந்தது. அந்த பணத்தை தரும்படி அவர் கேட்டு வந்தார்.

இந்த நிலையில், பணம் தருவதாக துர்கேசை நரேஷ்குமார் எரவாடா பகுதிக்கு அழைத்து உள்ளார். அதன்பேரில் துர்கேஷ் அங்கு சென்றார். அங்கு நண்பர்கள் இருவரும் சேர்ந்து மது அருந்தினர். போதை தலைக்கேறிய நிலையில் துர்கேஷ் பணத்தை தரும்படி வாக்குவாதம் செய்தார்.

இதில் நரேஷ்குமார் தன்னிடம் இருந்த ஆயிரம் ரூபாயை கொடுத்து விட்டு மீதி பணத்தை பின்னர் தருவதாக கூறினார். இதை ஏற்று கொள்ள மறுத்த துர்கேஷ் ஆத்திரமடைந்து தகராறு செய்தார். இந்த தகராறு முற்றியதில் அவர் நரேஷ்குமாரை பிடித்து கீழே தள்ளினார். பின்னர் அங்கு கிடந்த கல்லை கொண்டு நரேஷ் குமார் தலையில் போட்டு கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.

இது பற்றி தகவல் அறிந்த எரவாடா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து தப்பி சென்ற துர்கேசை அதிரடியாக கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story