மணப்பாறை, மருங்காபுரி தாலுகாக்களில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு
மணப்பாறை, மருங்காபுரி தாலுகாக்களில் நீர் நிலைகள் மற்றும் நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் ராஜாமணி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்கள்.
அப்போது மருங்காபுரி தாலுகா மதுக்காரம்பட்டியை சேர்ந்த முத்தவல்லி அப்துல்அமீது கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
மணப்பாறை, மருங்காபுரி ஒருங்கிணைந்த தாலுகாவாக இருந்தபோது நீர் நிலைகள் மற்றும் நீர்வழிப்பாதைகளில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்பாக மனு கொடுத்தேன். இதற்கு ஆதாரமாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெறப்பட்ட ஆவணங்களையும் தாக்கல் செய்தேன். மீண்டும், மீண்டும் மனு கொடுத்தும் இதுவரை நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொண்டு நீர்நிலைகள் மற்றும் நீர் வழிப்பாதைகளில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற உத்தரவிடவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
பாசன வாய்க்கால் விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் அன்புசெழியன், ம.தி.மு.க. புறநகர் மாவட்ட செயலாளர் டி.டி.சி சேரன், ராஜேஸ்வரி ஆகியோர் கொடுத்த மனுவில் மண்ணச்சநல்லூர் தாசில்தாராக இருந்த ரேணுகா, மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக பொதுமக்களால் சிறை பிடிக்கப்பட்டார். அவர் மீது தற்போது பணியிட மாற்றம் என்ற நடவடிக்கை மட்டுமே எடுக்கப்பட்டு உள்ளது. அவர் மீது மணல் திருட்டு வழக்கு பதிவு செய்து அரசு அறிவித்தபடி குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடவேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் தெற்கு மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் வந்து சுதந்திர போராட்டத்தின்போது மனித வெடிகுண்டாக வெடித்து சிதறிய வீரர் சுந்தரலிங்க தேவேந்திரனாருக்கு திருச்சி மன்னார்புரம் ரவுண்டானாவில் சிலை வைக்க வேண்டும் என கோரி மனு கொடுத்தனர்.
வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியினர் கொடுத்த மனுவில், திருச்சி பழைய பால்பண்ணை பகுதியில் கட்டண கழிப்பிடம் அமைக்க வேண்டும். சிறுவர் பூங்கா, திறந்த வெளி உடற்பயிற்சி கூடம் ஏற்படுத்த வேண்டும் என்று கூறி இருந்தனர். பாலக்கரை செங்குளம் காலனியில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைக்கக்கோரி ஆதி தமிழர் பேரவை சார்பில் செங்கை குயிலி, அறிவழகன் ஆகியோர் மனு கொடுத்தனர்.
சோழராஜாபுரம், வெக்காளியம்மன் கோவில் ரோடு, பஞ்சவர்ணசாமி கோவில் சாலைகளை சீரமைக்க வேண்டும் என பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட பிரசார பிரிவு தலைவர் நாகேந்திரன் மனு கொடுத்தார். இனாம்குளத்தூர் பெரிய ஏரியின் கரைகளை சீரமைக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சியின் மாவட்ட செயலாளர் ஜாகீர்உசேன் மனு கொடுத்தார்.
Related Tags :
Next Story