சம்பள உயர்வை அமல்படுத்த வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அங்கன்வாடி பணியாளர்கள்
சம்பள உயர்வை அமல்படுத்த வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அங்கன்வாடி பணியாளர்கள் சங்கத்தினர் நேற்று மாலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். இதையடுத்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களை அங்கு பாதுகாப்புக்காக நின்ற போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதுகுறித்து அங்கன்வாடி பணியாளர்கள் கூறியதாவது:-
கிராமப்புற மக்களுக்கான ஐ.சி.டி.எஸ். என்ற திட்டத்தின் கீழ் கடந்த 36 ஆண்டுகளாக நாங்கள் பணியாற்றி வருகிறோம். திட்டம், தேர்தல், துறை பணிகளுடன் மத்திய, மாநில அரசு பணிகளையும் நாங்கள் செய்கிறோம். இந்தநிலையில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு மத்திய அரசு ஊதிய உயர்வை அறிவித்தது. ஆனால் மாநில அரசு அதனை நடைமுறைப்படுத்தவில்லை.
மேலும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும் பணியாளருக்கு அன்றைய மாதம் வாங்கும் சம்பளத்தில் பாதியை குடும்ப ஓய்வூதியமாக வழங்க வேண்டும். அங்கன்வாடி மையங்களில் உள்ள சிலிண்டர்களுக்கு முழுமையான பணத்தை வழங்க வேண்டும். பணி உயர்வு பெற்றுள்ள பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாங்கள் இந்த போராட்டத்தில் ஈடுபடுகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதையடுத்து அதிகாரிகள் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு, தங்களுடைய கோரிக்கைகள் குறித்து கலெக்டர் டி.ஜி.வினயிடம் மனு அளித்துவிட்டு சென்றனர்.
Related Tags :
Next Story