கால்வாய்கள் ஆக்கிரமிப்பு: பலத்த மழை பெய்தும் தண்ணீர் தேக்கம் இல்லாத கண்மாய்கள், நிலங்கள் தரிசாக இருப்பதால் விவசாயிகள் வேதனை
பலத்த மழை பெய்தும் ஆக்கிரமிப்பில் உள்ள கால்வாய்களினால் கண்மாய்களில் தண்ணீர் தேக்க முடியாததால், நிலங்கள் தரிசாக கிடக்கின்றன. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
காரைக்குடி,
சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்ள் மிகவும் வறண்ட மாவட்டமாக அழைப்பது உண்டு. ஏனெனில் இந்த மாவட்டங்களுக்கும் ஆண்டு முழுவதும் நீரோட்டம் செல்லும் வகையில் எந்தவித ஆறு, கால்வாய், ஏரி ஆகியவைகள் கிடையாது. ஒவ்வொரு ஆண்டும் பூமி குளிர நல்ல மழை பெய்தால் மட்டுமே இந்த மாவட்டங்களில் குடிதண்ணீர் பற்றாக்குறை நீங்கி அதற்கு பின்னர் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்தநிலையில் காரைக்குடி மற்றும் அதை சுற்றியுள்ள சாக்கோட்டை, புதுவயல், கே.வேலங்குடி, பள்ளத்தூர், கானாடுகாத்தான், தேவகோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கண்மாய்கள் தற்போது வறண்ட நிலையில் காணப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த பகுதியில் பருவ மழை பலத்து பெய்தும் கூட இந்த பகுதியில் உள்ள கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்து இல்லாமல் வறண்ட நிலையில் காணப்படுகின்றன. வரத்து கால்வாய்களை அவர்கள் முறைப்படி தூர்வாரியும், அதில் ஏதேனும் ஆக்கிரமிப்பு இருந்தால் அதை முறைப்படி அகற்றி விட்டு கண்மாய்களுக்கு எந்தவித தடையில்லாமல் தண்ணீர் வருவதற்கு முன் ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
காரைக்குடி செஞ்சை நாட்டார் கண்மாய், புதுவயல் கண்மாய், கே.வேலங்குடி கண்மாய், பள்ளத்தூர் கண்மாய் உள்ளிட்ட பல்வேறு கண்மாய்களுக்கு வரும் வரத்து கால்வாய்கள் தூர்வாரப்படமால் வறண்ட நிலையில் காணப்பட்டு வருகிறது. இந்த கண்மாய் பாசனத்தை நம்பி இருந்த வயல்வெளிகள் எல்லாம் தற்சமயம் கருவேல மரங்கள் மண்டி அடந்த காட்டுப்பகுதியாக காட்சியளிக்கும் வகையில் உள்ளது.
இது குறித்து கே.வேலங்குடி பகுதியைச் சேர்ந்த விவசாயி கூறியதாவது:– எங்கள் பகுதியில் உள்ள கண்மாய்க்கு வரும் வரத்துகால்வாய்கள் அனைத்தும் தூர்வாரப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. பொதுவாக ஆண்டுதோறும் பெய்யும் மழையினால் இந்த பகுதியைச் சுற்றியுள்ள இடங்களில் மழைத்தண்ணீர் கண்மாய்களுக்கு வந்து நிரம்பும் வகையில் இருந்தது.
இதனால் இந்த பகுதியில் விவசாயம் மிகவும் செழித்து காணப்பட்டது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த பதியில் உள்ள வரத்துகால்வாய்கள் எல்லாம் ஆக்கிரமிப்பில் இருந்ததால் இந்த கண்மாயிக்கு மழைநீர் வருவது தடைப்பட்டு போனது. இதனால் தற்போது இங்குள்ள விளைநிலங்களில் கருவேல் மரங்கள் அடர்ந்து காணப்படுகிறது. மேலும் நிலங்கள் தரிசாக கிடப்பது கண்டு வேதனையாக உள்ளது. எனவே இந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கால்வாய்களை முறையாக சீரமைத்து இங்குள்ள கண்மாய்களுக்கு தண்ணீர் வர சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே விவசாயத்தை காப்பாற்ற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.