சாத்தூர் அருகே கொடூரம்: மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு குழந்தையை கொன்ற வாலிபர் கைது


சாத்தூர் அருகே கொடூரம்: மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு குழந்தையை கொன்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 30 Oct 2018 4:15 AM IST (Updated: 30 Oct 2018 3:54 AM IST)
t-max-icont-min-icon

சாத்தூர் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு பெற்ற குழந்தையை கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.

சாத்தூர்,

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடியைச் சேர்ந்தவர் சண்முகையா. இவருடைய மகன் திவாகர் (வயது 23). இவரும், அதே ஊரைச் சேர்ந்த சுபாஷினி என்பவரும் காதலித்தனர். அப்போது அவர்கள் நெருங்கி பழகிய நிலையில் சுபாஷினி கர்ப்பமடைந்தார். இதனையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டபோது திவாகர் மறுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து அவர் இருக்கன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து திவாகரை கைதுசெய்தனர். மேலும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையில் கர்ப்பம் அடைந்திருந்த சுபாஷினிக்கு கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு விஜயராகன் என்று பெயரிட்டனர்.

இந்தநிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு திவாகர் ஜாமீனில் வெளியே வந்தார். அப்போது அவரும், சுபாஷினியும் போலீஸ் நிலையத்தில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் கணவன்–மனைவியை போலீசார் அனுப்பிவைத்தனர்.

வீட்டிற்கு சென்றதில் இருந்து சுபாஷினிக்கும், திவாகருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் நேற்று காலை மீண்டும் தகராறு செய்த திவாகர், குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்று கூறியுள்ளார். பின்னர் சுபாஷினி இல்லாத நேரத்தில் குழந்தை விஜயராகவன் கண், மூக்கில் மிளகாய் பொடியை தூவியுள்ளார். பிறகு குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தப்பியோடிவிட்டார்.

வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய சுபாஷினி, குழந்தை இறந்து கிடப்பதை பார்த்து கதறி அழுதார். இதுதொடர்பாக இருக்கன்குடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில் திவாகர் அவரது தந்தை சண்முகையா வீட்டில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து அங்கு போலீசார் சென்றபோது திவாகர் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அதனை தடுத்து அவரை போலீசா£ கைது செய்தனர். தற்போது போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு பெற்ற குழந்தையை தந்தையே கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story