9 இடங்களில் சத்துணவு ஊழியர்கள் மறியல் 868 பெண்கள் உள்பட 930 பேர் கைது
விருதுநகர் மாவட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 9 இடங்களில் மறியலில் ஈடுபட்டனர். இதில் 686 பெண்கள் உள்பட 930 பேரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர்,
சத்துணவு ஊழியர்கள் தங்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சட்டப்படியான ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த வாரம் கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக சத்துணவு ஊழியர் சங்கத்தினர் அறிவித்து இருந்தனர்.
அதன்படி விருதுநகரில் நகராட்சி அலுவலகம் முன்பு கிளை தலைவர் ஜெயலட்சுமி தலைமையில் 43 பெண்கள் உள்பட 46 பேர் மறியலில் ஈடுபட்டனர். காரியாபட்டியில் 169 பெண்கள் உள்பட 175 பேர் கிளை தலைவர் இருதயம் தலைமையில் மறியலில் ஈடுபட்டனர். அருப்புக்கோட்டையில் புது பஸ் நிலையம் முன்பு மாவட்ட நிர்வாகி சுப்புகாளை தலைமையில் 75 பெண்கள் உள்பட 80 பேர் மறியல் செய்தனர். எம்.ரெட்டியபட்டி யூனியன் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் பாத்திமாமேரி தலைமையில் 79 பெண்கள் உள்பட 88 பேர் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜபாளையத்தில் மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமையில் 168 பெண்கள் உள்பட 181 பேர் மறியல் செய்தனர். சாத்தூரில் கிளை தலைவர் காசிமணி தலைமையில் 72 பெண்கள் உள்பட 75 பேரும், வெம்பக்கோட்டை யூனியன் அலுவலகம் முன்பு கிளை தலைவர் ரவீந்திரன் தலைமையில் 146 பெண்கள் உள்பட 152 பேரும், நரிக்குடி பஸ் நிலையம் முன்பு ஒன்றிய தலைவர் கண்ணன் உள்பட 120 பேரும், சாட்சியாபுரம் பஸ் நிறுத்தம் முன்பு மாவட்ட துணைத்தலைவர் அய்யம்மாள் தலைமையில் 11 பெண்கள் உள்பட 13 பேரும் மறியல் செய்தனர்.
மாவட்டம் முழுவதும் 9 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 868 பெண்கள் உள்பட 930 சத்துணவு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். இம்மாவட்டத்தில் உள்ள 1450 சத்துணவு மையங்களிலும் பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவு வழங்க மாவட்ட நிர்வாகம் மாற்று ஏற்பாடு செய்து இருந்தது.