கலெக்டர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் கைது


கலெக்டர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் கைது
x
தினத்தந்தி 30 Oct 2018 4:45 AM IST (Updated: 30 Oct 2018 4:17 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.

மதுரை,

தமிழ்நாடு அரசின் சத்துணவு ஊழியர்கள், தங்களை முழுநேர அரசு ஊழியராக்கி முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு சட்டப்பூர்வ ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். உணவு மானியத்தொகையை ஒரு குழந்தைக்கு ரூ.5ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி கடந்த 25–ந் தேதி முதல் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அப்போது அங்கேயே சமைத்து சாப்பிட்டு, இரவும் தங்கினர். ஆனால் இவர்களின் போராட்டத்திற்கு அரசு செவிசாய்க்கவில்லை. அரசு தரப்பில் இருந்து அவர்களிடம் எந்த பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை.

இதைத்தொடர்ந்து சத்துணவு ஊழியர்கள் தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்தனர். அதன்படி நேற்று கலெக்டர் அலுவலகம் முன்புள்ள சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட கலைந்து செல்லும்படி கேட்டு கொண்டனர். ஆனால் சத்துணவு ஊழியர்கள் கலைந்து செல்ல மறுத்துவிட்டனர். இதனையடுத்து மறியல் செய்த 221 ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.


Next Story