விபத்தில் பலியான போலீஸ்காரரின் குடும்பத்தினருக்கு ரூ.55½ லட்சம் இழப்பீடு தஞ்சை கோர்ட்டு உத்தரவு


விபத்தில் பலியான போலீஸ்காரரின் குடும்பத்தினருக்கு ரூ.55½ லட்சம் இழப்பீடு தஞ்சை கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 29 Oct 2018 10:00 PM GMT (Updated: 29 Oct 2018 10:57 PM GMT)

விபத்தில் பலியான போலீஸ்காரரின் குடும்பத்தினருக்கு ரூ.55½ லட்சம் இழப்பீடு வழங்குமாறு தஞ்சை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூர், 

தஞ்சை நவநீதபுரம் புதிய காவலர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ராமநாதன்(வயது 40). இவருடைய மனைவி ஷோபா(38). இவர்களுக்கு அம்சாந்தினி(14), அனுவர்ஷினி(12) என 2 மகள்களும், அம்சவர்த்தன்(9) என்ற ஒரு மகனும் உள்ளனர். ராமநாதன் பட்டுக்கோட்டை மதுவிலக்கு பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.

கடந்த 20.1.2017 அன்று வழக்கம்போல இவர் தஞ்சையில் இருந்து பட்டுக்கோட்டைக்கு மோட்டார் சைக்கிளில் பணிக்கு சென்று கொண்டு இருந்தார். தஞ்சை-பட்டுக்கோட்டை சாலையில், சூரக்கோட்டை அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளை நிறுத்தி அந்த வழியாக வந்த மைத்துனர் ஜெயமுருகனிடம் ராமநாதன் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது வேகமாக வந்த கார், ராமநாதன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ராமநாதன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தஞ்சை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் விபத்தில் பலியான தனது கணவருக்கு இழப்பீடு கோரி தஞ்சை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயம் மற்றும் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் ராமநாதனின் மனைவி ஷோபா வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ண ஜெயஆனந்த், விபத்தில் பலியான போலீஸ்காரரின் குடும்பத்தினருக்கு ரூ.55 லட்சத்து 67 ஆயிரத்து 770 இழப்பீடு வழங்குமாறு தனியார் இன்சூரன்ஸ் நிறுவன சென்னை நுங்கம்பாக்கம் கிளை மேலாளருக்கு உத்தரவிட்டார்.

Next Story