சிதம்பரத்தில் சதித்திட்டம் தீட்டிய 4 ரவுடிகள் கைது - போலீசார் அதிரடி நடவடிக்கை
சிதம்பரத்தில் சதித்திட்டம் தீட்டிய 4 ரவுடிகளை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
சிதம்பரம்,
சிதம்பரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது பொன்னேரி கரைபாலம் அருகே சந்தேகப்படும்படியாக 4 பேர் இரும்பு குழாய்களுடன் நின்று கொண்டிருந்தனர். மேலும் போலீசாரை பார்த்தவுடன் அவர்கள் தப்பிச் செல்ல முயன்றனர்.
உடனே போலீசார் 4 பேரையும் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் சி.தண்டேஸ்வரநல்லூரை சேர்ந்த ஐம்பலவாசன் மகன் பில்லா என்கிற பிர்ளயகாளேஸ்வரன் (வயது 27), அவரது அண்ணன் ரதன் சந்தாவத் சலும்பரா (30), ஓமகுளம் ரவிந்திரன் மகன் இளவரசன் (29), முத்து மாணிக்கம் நாடார் தெரு சவுரிராஜன் மகன் சதீஷ்குமார் (26) ஆகியோர் என்பதும், 4 பேரும் ரவுடிகள் பட்டியலில் உள்ளவர்கள் என்பதும் தெரிந்தது.
இதையடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 4 இரும்பு குழாய்களை பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில், 4 பேரும் சேர்ந்து தீபாவளி பண்டிகைக்காக டாஸ்மாக் கடையை உடைத்து பணம் கொள்ளையடிப்பது, வழிப்பறி செய்வது போன்ற பல்வேறு சதித்திட்டங்கள் தீட்டியது தெரியவந்தது.
இதுதவிர கைது செய்யப்பட்ட பில்லா மீது சிதம்பரம் நகரம், அண்ணாமலைநகர், கிள்ளை, ஒரத்தூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் வழிப்பறி, திருட்டு போன்ற 12 வழக்குகளும், ரதன் சந்தாவத் சலும்பரா மீது 4 வழக்குகளும், இளவரசன் மீது ஒரு வழக்கும், சதீஷ்குமார் மீது 2 வழக்குகளும் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story