பணகுடி அருகே பரிதாபம் மர்ம காய்ச்சலுக்கு குழந்தை பலி


பணகுடி அருகே பரிதாபம் மர்ம காய்ச்சலுக்கு குழந்தை பலி
x
தினத்தந்தி 31 Oct 2018 3:00 AM IST (Updated: 30 Oct 2018 7:52 PM IST)
t-max-icont-min-icon

பணகுடி அருகே நேற்று மர்ம காய்ச்சலுக்கு 2¾ வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.

பணகுடி, 

பணகுடி அருகே நேற்று மர்ம காய்ச்சலுக்கு 2¾ வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.

குழந்தைக்கு மர்ம காய்ச்சல் 

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள வீரபாண்டியன் கிராமத்தை சேர்ந்தவர் பழனி. அவருடைய மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகனும், 2¾ வயதில் சின்மகி என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் குழந்தை சின்மகிக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து வாந்தியும் ஏற்படவே, உடனடியாக சிகிச்சைக்காக வள்ளியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் குழந்தையை சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

பரிதாப சாவு 

அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை குழந்தை சின்மகி பரிதாபமாக இறந்ததது. இதனால் குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். மேலும் இதுபற்றிய தகவல் அறிந்ததும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் பணகுடி அரசு மருத்துவமனையை சேர்ந்த மருத்துவ குழுவினர் வீரபாண்டியன் கிராமத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். அங்கு சுகாதார பணிகளை மேற்கொண்டனர்.

மர்ம காய்ச்சலுக்கு குழந்தை சின்மகி பரிதாபமாக இறந்த சம்பவம், வீரபாண்டியன் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு வள்ளியூரில் பவித்ரா என்ற 1½ வயது குழந்தையும், கூடங்குளம் அருகே இடிந்தகரையில் ஜெனதா என்ற பெண்ணும் மர்ம காய்ச்சலுக்கு பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story