கார் மெக்கானிக் கடத்தல் விவகாரம்: போலி சாமியார் உள்பட 5 பேர் கைது


கார் மெக்கானிக் கடத்தல் விவகாரம்: போலி சாமியார் உள்பட 5 பேர் கைது
x
தினத்தந்தி 31 Oct 2018 4:30 AM IST (Updated: 31 Oct 2018 2:33 AM IST)
t-max-icont-min-icon

கார் மெக்கானிக் கடத்தல் விவகாரம் தொடர்பாக போலி சாமியார் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள நல்லப்பநாயக்கனூரை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 23). கார் மெக்கானிக். மற்றும் கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த 24-ந் தேதி இவர் கடத்தப்பட்டார். இவரை கடத்திய கும்பல் ரூ.6 லட்சம் கேட்டு மிரட்டியது.

இது தொடர்பாக ஸ்ரீதரின் தந்தை ராஜாமணி மத்தூர் போலீசில் புகார் செய்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில் ஸ்ரீதர் மத்தூர் போலீஸ் நிலையத்திற்கு திரும்பி வந்தார். அவரை விடுவிக்க ரூ.6 லட்சம் வரையில் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜபாண்டி, மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் ஸ்ரீதரிடம் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது கிடைத்த தகவல்கள் வருமாறு:-

வேலம்பட்டி கொட்டாவூரை சேர்ந்தவர் பெரியசாமி. போலி சாமியார். இவருக்கும் ஸ்ரீதருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. அவர் கூச்சூர் பகுதியில் புதையல் உள்ளதாகவும், அதில் 3 சாமி சிலைகள், இரிடியம் சொம்பு இருப்பதாகவும் கூறினார். இந்த புதையலை எடுக்க நாகமணி தேவை என்றும், தன்னிடம் ரூ.10 லட்சம் தந்தால் நாகமணியை தருவதாக சாமியார் பெரியசாமி ஸ்ரீதரிடம் கூறினார்.

இதை நம்பிய ஸ்ரீதர் ரூ.4 லட்சம் பணம் கொடுத்தார். இதன் பிறகு குறிப்பிட்ட பகுதிக்கு நாகமணியை வைத்து பூஜை செய்த சாமியார் அந்த பகுதியில் புதையல் இருப்பதாக கூறினார். அப்போது அங்கு சென்று தோண்டிய போது 3 சாமி சிலைகள் கிடைத்தன. இந்த சிலைகள் தன்னிடம் இருக்கட்டும், நாகமணியை நீ வைத்துக் கொள் என்று ஸ்ரீதரிடம் கூறிய போலி சாமியார் பெரியசாமி, அந்த நாகமணி உள்ள பையை திறந்து பார்த்தால் நீ இறந்து விடுவாய் என எச்சரித்தார்.

இதன் பிறகு நாகமணி உள்ள பையை ஸ்ரீதர் திறந்து பார்த்தார். அதில் ரப்பர் போன்ற ஒரு பொருள் இருந்தது. இது குறித்து சாமியாரிடம் ஸ்ரீதர் கேட்டார். அப்போது சாமியார் பெரியசாமி, நீ நாகமணியை பல லட்ச ரூபாய்க்கு விற்று விட்டு என்னிடம் நாடகம் ஆடுகிறாய். எனக்கு ரூ.6 லட்சம் தர வேண்டும். அதை உடனடியாக கொடு என மிரட்டினார்.

அந்த பணத்தை தர முடியாது என ஸ்ரீதர் கூறினார். இதனால் ஸ்ரீதரை பெரியசாமி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கடத்தி பணம் கேட்டு மிரட்டியது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து போலி சாமியார் பெரியசாமி, அவரது கூட்டாளிகள் சின்னபையன், சக்திவேல், கோவிந்தராஜ், சரவணன் ஆகிய 5 பேரை போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 3 வெண்கல சாமி சிலைகள், ரூ.1 லட்சம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதில் பர்கூர் சாமியார் ஒருவர் உள்பட மேலும் 3 பேருக்கு தொடர்பு உள்ளது. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story