உளுந்தூர்பேட்டை பகுதியில் அடுத்தடுத்த சம்பவம்: ஸ்கூட்டரில் சென்ற ஆசிரியை உள்பட 2 பெண்களிடம் 19 பவுன் நகை பறிப்பு - ‘ஹெல்மெட்’ கொள்ளையர்கள் அட்டூழியம்
உளுந்தூர்பேட்டை பகுதியில் ஸ்கூட்டரில் சென்ற ஆசிரியை உள்பட 2 பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் ‘ஹெல்மெட்’ அணிந்து வந்த கொள்ளையர்கள் மொத்தம் 19 பவுன் நகையை பறித்து சென்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த இருவேறு சம்பவங்கள் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
உளுந்தூர்பேட்டை,
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறையூர் கிராமத்தை சேர்ந்தவர் சூசைநாதன். இவருடைய மனைவி மெடில்டா ஜெயகுமாரி (வயது 40). காம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் தினந்தோறும் காலையில் தனது ஸ்கூட்டரில் எறையூரில் இருந்து காம்பட் அரசு பள்ளிக்கு சென்று மாலை வீடு திரும்புவது வழக்கம்.
அதன்படி நேற்று காலை மெடில்டா ஜெயகுமாரி தனது ஸ்கூட்டரில் பள்ளிக்கு புறப்பட்டார். எறையூர்-காம்பட்டு கிராம சாலையில் பில்ராம்பட்டு ஏரிக்கரை அருகே சென்றபோது, பின்னால் ஒரு மோட்டார் சைக்கிளில் ‘ஹெல்மெட்’ அணிந்து வந்த மர்மநபர்கள் 2 பேரில் ஒருவன் திடீரென ஸ்கூட்டரில் சென்ற மெடில்டா ஜெயகுமாரி கழுத்தில் கிடந்த 12 பவுன் நகையை பறித்தான்.
அப்போது நிலைதடுமாறிய மெடில்டா ஜெயகுமாரி, ஸ்கூட்டருடன் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதனிடையே நகை பறித்த மர்மநபர்கள் 2 பேரும் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுவிட்டனர். மெடில்டா ஜெயகுமாரியை அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதேபோல், சின்னசேலம் அருகே உள்ள நயினார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி கலைவாணி(45). சின்னசேலத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று காலை வழக்கம்போல் வீட்டில் இருந்து தனது ஸ்கூட்டரில் கல்லூரிக்கு புறப்பட்டார். நயினார்பாளையம்-சின்னசேலம் சாலையில் பேக்காடு வனப்பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் ஒரு மோட்டார் சைக்கிளில் ‘ஹெல்மெட்’ அணிந்து வந்த மர்மநபர்கள் 2 பேர், திடீரென கலைவாணி ஓட்டிச் சென்ற ஸ்கூட்டர் மீது தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளை மோதினர். இதில் கலைவாணி நிலைதடுமாறி ஸ்கூட்டருடன் கீழே விழுந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்த மர்மநபர் ஒருவர், திடீரென கலைவாணி கழுத்தில் கிடந்த 15 பவுன் நகையை பறிக்க முயன்றான். அப்போது, அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் ஏதும் இல்லாமல், சாலை வெறிச்சோடி கிடந்தது. இதனால் பயந்து போன, கலைவாணி என்னை எதுவும் செய்து விடாதீர்கள் நகையை கழற்றி தருகிறேன் என கூறி கழுத்தில் கிடந்த நகையை எடுத்தார்.
அந்த சமயத்தில் அந்த வழியாக வாகனம் வரும் சத்தத்தை கேட்ட கலைவாணி நகையை கையில் இறுக்கி பிடித்துக் கொண்டார். உடனே அந்த மர்மநபர்கள், கலைவாணி கையில் வைத்திருந்த நகையை பறித்தபோது, சங்கிலி இரண்டாக அறுந்ததில் ஒரு பகுதி நகையை மட்டும் அவர்கள் பறித்துக் கொண்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டனர். மர்மநபர்கள் பறித்து சென்ற நகை 7 பவுன் ஆகும். இதனிடையே ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்ததில் கலைவாணிக்கு கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதைபார்த்த அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், அவரை மீட்டு சிகிச்சைக்காக நயினார்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று இருவேறு இடங்களில் ஹெல்மெட் அணிந்து வந்த கொள்ளையர்கள் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் இந்த இரு சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கும் தொடர்பு இருக்கும் என்று போலீசார் கருதுகின்றனர். ஏனெனில் இருவேறு சம்பவத்திலும் தனியாக ஸ்கூட்டரில் செல்லும் பெண்களை குறிவைத்தே நடந்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதே வேளையில் வேறு ஏதேனும் பகுதியில் இருந்து கொள்ளை கும்பல், விழுப்புரம் மாவட்டத்திற்குள் நுழைந்து விட்டதா என்று பொதுமக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.
இது தொடர்பாக மெடில்டா ஜெயகுமாரி அளித்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசாரும், கலைவாணி அளித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசாரும் தனித்தனியே வழக்குப்பதிவு செய்து, ஹெல்மெட் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Related Tags :
Next Story