வெவ்வேறு விபத்துகளில் பலியான 2 தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ரூ.12½ லட்சம் இழப்பீடு - தஞ்சை கோர்ட்டு உத்தரவு


வெவ்வேறு விபத்துகளில் பலியான 2 தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ரூ.12½ லட்சம் இழப்பீடு - தஞ்சை கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 30 Oct 2018 10:00 PM GMT (Updated: 30 Oct 2018 9:23 PM GMT)

வெவ்வேறு விபத்துகளில் பலியான 2 தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ரூ.12½ லட்சம் இழப்பீடு வழங்குமாறு தஞ்சை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூர், 

தஞ்சை மாவட்டம் திருவையாறு, ஈச்சங்குடி எட்டரைவேளி பகுதியில் வசித்து வந்தவர் ரவிச்சந்திரன் (வயது 56). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 29.9.2017 அன்று பொன்னாவரையில் இருந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார். அப்போது அந்தவழியாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ரவிச்சந்திரன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து திருவையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதேபோல, ஒரத்தநாடு ஆழியவாய்க்கால் தெற்குதெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி (60). கூலித்தொழிலாளி. கடந்த 13.9.2016 அன்று கலியமூர்த்தி தஞ்சை சாலை, தென்னமநாடு பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்தவழியாக வந்த சரக்குவேன் கலியமூர்த்தி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் இழப்பீடு கோரி ரவிச்சந்திரனின் மனைவி பத்மா, கலியமூர்த்தியின் மனைவி மூக்காயி ஆகியோர் தனித்தனியாக தஞ்சை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயம் மற்றும் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்குகளை விசாரித்த நீதிபதி பூர்ண ஜெயஆனந்த், வெவ்வேறு விபத்துகளில் பலியான ரவிச்சந்திரன் குடும்பத்துக்கு ரூ.9 லட்சத்து 23 ஆயிரத்து 700-ம், கலியமூர்த்தி குடும்பத்துக்கு ரூ.3 லட்சத்து 29 ஆயிரத்து 980-ம் இழப்பீடாக வழங்குமாறு யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன தஞ்சை கிளை மேலாளருக்கு உத்தரவிட்டார்.

Next Story